பக்கம் எண் :


91


பச்சிலை மரத்தை முரித்துழக்கின பரந்த அடிகளையுடைய கரிய சேற்றை யப்பிய நெற்றியையுடைய கொல்ல வல்ல களிற்றியானை; பேதை ஆசினி ஒசித்த வீ தா வேங்கைய மலைகிழவோற்கு - அறியாமையால் ஆசினியை முரித்து மலருதிர்ந்து பரவிய வேங்கை மரத்தின்கீழே தங்காநிற்கும் மலைகிழவோனுக்கு; யாங்குச் செய்வோம் - என்ன செய்ய மாட்டுவேம்; கூறாய், எ - று.

     (வி - ம்.) யாங்கு - என்னவண்ணம். கழை - மூங்கிலின் தண்டு. காம்பு - மூங்கில். குளவி - காட்டுமல்லிகையுமாம். மிளிர்தல் - புரளுதல். இடிமோதி மழைபெய்யும் நெறியில், காதலன் யாங்ஙனம் வருவனோவென்ற ஏக்கத்தினால் உடம்பு வேறுபட்டதை அன்னை முருகணங்கெனக் கொண்டனளென்க.

     வேலன் வருதலும் தலைவியை முன்னிறுத்தி அவள் கூந்தலிற் பூவையெடுத்துப் போகட்டுப் பரவுக்கடன் கொடுத்தல் இயல்பாதலின் முச்சியளிப்பானாதென்றாள்; இதனை "நெடுவே லேந்திய நீயெமக்கியாஅர் தொடுத லோம்பென அரற்றலும் அரற்றும், கடவுள் வேங்கையுங் காந்தளு மலைந்த, தொடலைக் கண்ணி பரியல மென்னும்'" (தொல்-பொ-சூ- 115, மேற்கோள்) என்பதனாலுமுணர்க.

     உள்ளுறை :- குளவியைக் குழைத்த களிறு தலைவியை நலனுண்டு வாடவிட்ட தலைவனாகவும், அது சேற்றை நெற்றியிலணிந்தது ஊரார் தூற்றும் பழிச்சொல்லைத் தலைவன் மேற்கொண்டதாகவும், அறியாமையால் ஆசினியை ஒசித்தது அவன் அறியாமையால் இதுகாறும் வரைந்தெய்து நெறியைக் கைவிட்டதாகவும், களிறு வேங்கையின் கீழே தங்கியிருப்பது தலைவன் ஒரு சிறைப்புறமாக வந்து தங்கியிருப்பதாகவுங் கொள்க. இது வினையுவமப் போலி. மெய்ப்பாடு - அழுகையைச் சார்ந்த அச்சம். பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) தலைவன் வரவினைத் தடைசெய்யுமாற்றால் என்னை வருத்தா நின்ற பெயல் வந்ததோடமையாது பின்னும் பெரிதும் வருத்துவான் வேலனும் வந்தான் என்பது கருத்து. பெயலொடு என்புழி ஒடுவுருபு - உடனிகழ்ச்சிப் பொருண்மைத்து.

(51)
  
     திணை : பாலை.

     துறை : இது, தலைமகன் செலவழுங்கியது.

     (து - ம்.) என்பது, பொருள்வயிற்பிரியுந் தலைமகன் பிரிதற்கு உள்ளம் எழானாகி நெஞ்சைநோக்கி நெஞ்சமே ! யாம் இவளது முயக்கத்தைக் கைவிடக் கருதுகில்லேம்; நீ தானும் முயற்சியை மேற்கொண்டு பிரிந்துபோதலைக் கருதியமைகின்றிலை; இவளது முயக்கத்தினும் பொருள் மென்மையதாதலின் நீயே போவாயெனக் கூறிச் செலவழுங்கா நிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "வேற்றுநாட்டு அகல்வயின் விழுமத் தானும்" (தொல்-கற்- 5) என்னும் விதி கொள்க.