பக்கம் எண் :


99


செய்வினைக்கு உசா ஆய் ஒருங்கு வரல் நசையொடு வருந்தும் கொல்லோ - ஆண்டு அவர் செய்யும் வினைக்குச் சூழ்ச்சி சொல்லும் துணையாயிருந்து முற்றுவித்து அவருடன் ஒருசேர வருதற்கு விருப்பமுற்று வருந்தியிருக்கின்றதோ ?; அருளான் ஆதலின் - அன்றி அவர் அருள் செய்யாமையாலே; அழிந்து இவண் வந்து தொல் நலம் இழந்த என் பொன் நிறம் நோக்கி - கலங்கி இங்கு வந்து அஃது என்னைப் பிரியுமுன்னிருந்த நலன் இழந்துவிட்டதனாலாகிய எனது பொன்னிறமான பசலையை நோக்கி; இவள் ஏதிலாட்டி என நோய் தலை மணந்து போயின்று கொல்லோ - 'இவள் அயலிலாட்டியாகும் என்னை விடுத்தவளைக் காண்கிலேன்மன் !' என்றெண்ணி நோய்மிகக் கொண்டு என்னைத் தேடிச் சென்றொழிந்ததோ? அறிகிலேன்; ஆதலின், யான் எங்ஙனம் ஆற்றுகிற்பேன்; எ - று.

     (இ - ம்.) எல் - ஒளி. உசாத்துணை - சூழ்ச்சி வினாவுந்துணை. அருளான் : பன்மை ஒருமை மயக்கம். இனி, அவ்விடத்துச் சினமூளுதலின் ஒருமையாக விளித்துக் கூறினாளுமாம். போயின்றுகொல் என்றது ஆங்கு நெஞ்சழிதல்.

     செய்வினைக்கென அவன் பொருள்வயிற் சென்றதும், ஒருங்குவரல் நசைஇயென இன்னும் அவன் வாராமையும், வளைநெகிழ்த்தோரென அவன் பிரிவாலுண்டாகிய மெய்வாட்டமும,் அல்லலுறீஇயர் சென்ற நெஞ்சமெனத் தன்னெஞ்சழிந்தமையும், என்பொன்னிறமெனப் பசலை பூத்தமையுங்கூறி வருந்தியது காண்க, மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) இஃது "நோயும் இன்பமும்" (தொல்-பொருளியல்- 2) என்னும் வழுவமைதி நூற்பா பற்றி நெஞ்சினை உணர்வுடையதுபோல் உறுப்புடையதுபோல் வேறு நிறுத்தித் தலைவி கூறியதாம். பாடபேதங்கள்: வண்டுக்க நாற்றம்; அல்லல் உறீஇ; செய்வினைக்கு அசாவா; உசாவா; நேர்தலையிழந்தே.

(56)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : இது, செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது.

     (து - ம்.) என்பது, பகற்குறிவந் தொழுகா நின்ற தலைமகனைத் தோழி 'புனத்திலே தினை கொய்யுங்காலம் அணுகியதாதலின், இனித் தலைவி மனையகம் புகுதா நிற்கும். அங்ஙனம் புக்கபின் நீ ஆண்டெய்துதற் கியலாமையின் அவள் தன்னலந் தொலைந்து வருந்துமென்று யான் மருளுகின்றே' னெனவும் உள்ளுறையால் அவன் விரைவில் வரைந்துகொள்ளுமாறுங் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் .. . . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல்-கள- 23) என்னும் விதியின்கண் அமைத்துக் கொள்க.