......
1-10


1. குறிஞ்சி

செங்களம் படக் கொன்று அவுணர்த் தேய்த்த

செங் கோல் அம்பின், செங் கோட்டு யானை,

கழல் தொடி, சேஎய் குன்றம்

குருதிப் பூவின் குலைக் காந்தட்டே.

தோழி கையுறை மறுத்தது. - திப்புத்தோளார்


2. குறிஞ்சி

கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!

காமம் செப்பாது, கண்டது மொழிமோ:

பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,

செறி எயிற்று, அரிவை கூந்தலின்

நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தவழி, தலைமகளை இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடுபட்டு நின்ற தலைமகன், நாணின் நீக்குதற்பொருட்டு, மெய் தொட்டுப் பயிறல் முதலாயின அவள்மாட்டு நிகழ்த்திக் கூடி, தனது அன்பு தோற்ற நலம் பாராட்டியது. - இறையனார்.


3. குறிஞ்சி

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;

நீரினும் ஆர் அளவின்றே- சாரல்

கருங் கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு,

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டி, தோழி இயற் பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது. - தேவகுலத்தார்


4. நெய்தல்

நோம், என் நெஞ்சே; நோம், என் நெஞ்சே;

இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி,

அமைதற்கு அமைந்த நம் காதலர்

அமைவு இலர் ஆகுதல், நோம், என் நெஞ்சே.

பிரிவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - காமஞ்சேர் குளத்தார்


5. நெய்தல்

அதுகொல், தோழி! காம நோயே?-

வதி குருகு உறங்கும் இன் நிழற் புன்னை,

உடை திரைத் திவலை அரும்பும் தீம் நீர்,

மெல்லம் புலம்பன் பிரிந்தென,

பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே.

பிரிவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - நரி வெரூஉத்தலையார்


6. நெய்தல்

நள்ளென்றன்றே, யாமம்; சொல் அவிந்து,

இனிது அடங்கினரே, மாக்கள்; முனிவு இன்று,

நனந்தலை உலகமும் துஞ்சும்;

ஓர் யான் மன்ற துஞ்சாதேனே.

வரைவிடை வைத்துப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழியை நெருங்கிச் சொல்லியது. - பதுமனார்


7. பாலை

வில்லோன் காலன கழலே; தொடியோள்

மெல் அடி மேலவும் சிலம்பே; நல்லோர்

யார்கொல்? அளியர்தாமே-ஆரியர்

கயிறு ஆடு பறையின், கால் பொரக் கலங்கி,

வாகை வெண் நெற்று ஒலிக்கும்

வேய் பயில் அழுவம் முன்னியோரே.

செலவின்கண் இடைச்சுரத்துக் கண்டார் சொல்லியது. - பெரும்பதுமனார்


8. மருதம்

கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம்

பழன வாளை கதூஉம் ஊரன்

எம் இல் பெருமொழி கூறி, தம் இல்,

கையும் காலும் தூக்கத் தூக்கும்

ஆடிப் பாவை போல,

மேவன செய்யும், தன் புதல்வன் தாய்க்கே.

கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள் எனக் கேட்ட காதற் பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - ஆலங்குடி வங்கனார்.


9. நெய்தல்

யாய் ஆகியளே மாஅயோளே-

மடை மாண் செப்பில் தமிய வைகிய

பெய்யாப் பூவின் மெய் சாயினளே;

பாசடை நிவந்த கணைக் கால் நெய்தல்

இன மீன் இருங் கழி ஓதம் மல்குதொறும்

கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும்

தண்ணம் துறைவன் கொடுமை

நம் முன் நாணிக் கரப்பாடும்மே.

தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது. - கயமனார்


10. மருதம்

யாய் ஆகியளே விழவு முதலாட்டி;

பயறு போல் இணர பைந் தாது படீஇயர்

உழவர் வாங்கிய கமழ் பூ மென் சினைக்

காஞ்சி ஊரன் கொடுமை

கரந்தனள் ஆகலின், நாணிய வருமே.

தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது. - ஓரம்போகியர்