வண்டு படத் ததைந்த கொடி இணர் இடையிடுபு,
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்
கதுப்பின் தோன்றும் புதுப் பூங் கொன்றைக்
கானம், ''கார்'' எனக் கூறினும்,
யானோ தேறேன்; அவர் பொய் வழங்கலரே.
உரை
பருவம் வருந்துணையும் ஆற்றுவித்த தோழி, ''அவர் வரல் குறித்த பருவ வரவின் கண் இனி ஆற்றுவிக்குமாறு எவ்வாறு?'' என்று தன்னுள்ளே கவன்றாட்கு, அவளது குறிப்பு அறிந்த தலைமகள், ''கானம் அவர் வரும் கார்காலத்தைக் காட்டிற்றாயினும் யான் இது கார் காலமென்று தேறேன், அவர் பொய் கூறாராகலின்’ எனத்தான் ஆற்றுவல் என்பது படச் சொல்லியது. - ஓதலாந்தையார்.
நீர் வார் கண்ணை நீ இவண் ஒழிய,
யாரோ பிரிகிற்பவரே?-சாரல்
சிலம்பு அணி கொண்ட வலம் சுரி மராஅத்து
வேனில் அம் சினை கமழும்
தேம் ஊர் ஒண்ணுதல்!-நின்னொடும், செலவே.
உரை
செலவுக்குறிப்பறிந்து ஆற்றாளாகிய கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.- சேரமான் எந்தை
அகவன்மகளே! அகவன்மகளே!
மனவுக் கோப்பு அன்ன நல் நெடுந் கூந்தல்
அகவன்மகளே! பாடுக பாட்டே;
இன்னும், பாடுக, பாட்டே-அவர்
நல் நெடுங் குன்றம் பாடிய பாட்டே.
உரை
கட்டுக்காணிய நின்றவிடத்து, தோழி அறத்தோடு நின்றது. - ஒளவையார்
கருங் கால் வேம்பின் ஒண் பூ யாணர்
என்னை இன்றியும் கழிவதுகொல்லோ?
ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து
எழு குளிறு மிதித்த ஒரு பழம் போலக்
குழைய, கொடியோர் நாவே,
காதலர் அகல, கல்லென்றவ்வே.
உரை
பருவம் கண்டு ஆற்றாளாகிய கிழத்தி உரைத்தது. - பரணர்
யாரும் இல்லை; தானே கள்வன்;
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினை தாள் அன்ன சிறு பசுங் கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே.
உரை
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கபிலர்
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கை
மேக்கு எழு பெருஞ் சினை இருந்த தோகை
பூக் கொய் மகளிரின் தோன்றும் நாடன்
தகாஅன் போலத் தான் தீது மொழியினும்,
தன் கண் கண்டது பொய்க்குவது அன்றே-
தேக் கொக்கு அருந்தும் முள் எயிற்றுத்துவர் வாய்
வரை ஆடு வன் பறழ்த் தந்தைக்
கடுவனும் அறியும், அக் கொடியோனையே.
உரை
நற்றாயும் செவிலித் தாயும் தலைமகளது வேறுபாடு கண்டு, ''இஃது எற்றினான்ஆயிற்று?'' என்று கட்டுவிச்சியை வினவிக் கட்டுக் காண்கின்ற காலத்து,''தலைமகளது வேறுபாட்டிற்குக் காரணம் பிறிதோர் தெய்வம் என்று கூறக் கேட்டு தோழி அறத்தொடு நின்றது. - கொல்லன் அழிசி-
கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது,
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு,
எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது,
பசலை உணீஇயர் வேண்டும்-
திதலை அல்குல் என் மாமைக் கவினே.
உரை
பிரிவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - வெள்ளி வீதியார்
முட்டுவேன்கொல்? தாக்குவேன்கொல்?
ஓரேன், யானும்: ஓர் பெற்றி மேலிட்டு,
''ஆஅ! ஒல்'' எனக் கூவுவேன்கொல்?-
அலமரல் அசைவளி அலைப்ப, என்
உயவு நோய் அறியாது, துஞ்சும் ஊர்க்கே.
உரை
வரைவிடை ஆற்றாளாய்க் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - ஒளவையார்
நல் உரை இகந்து, புல் உரை தாஅய்,
பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி,
அரிது அவாவுற்றனை-நெஞ்சே!-நன்றும்
பெரிதால் அம்ம நின் பூசல், உயர் கோட்டு
மகவுடை மந்தி போல
அகன் உறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.
உரை
இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைமகன், ''இவர் எம்மை மறுத்தார்'' என்று வரைந்து கொள்ள நினையாது, பின்னும் கூடுதற்கு அவாவுற்ற நெஞ்சினை நோக்கிக் கூறியது. - ஒளவையார்
கேட்டிசின் வாழி-தோழி!-அல்கல்,
பொய்வலாளன் மெய் உற மரீஇய
வாய்த் தகைப் பொய்க் கனா மருட்ட, ஏற்று எழுந்து,
அமளி தைவந்தனனே; குவளை
வண்டு படு மலரின் சாஅய்த்''
தமியென்; மன்ற அளியென் யானே!
உரை
''அவர் நின்னை வரைந்து கோடல் காரணத்தால் பிரியவும், நீ ஆற்றியிராது,ஆற்றாயாகின்றது என்?'' என வினாய தோழிக்குத் தலைமகள்,''யான் ஆற்றியுள்ளேனாகவும், கனவு வந்து என்னை இங்ஙனம் நலிந்தது’ எனக் கூறியது. - கச்சிப் பேட்டு நன்னாகையார்