வங்காக் கடந்த செங் கால் பேடை
எழால் உற வீழ்ந்தென, கணவற் காணாது,
குழல் இசைக் குரல குறும் பல அகவும்
குன்று உறு சிறு நெறி அரிய என்னாது,
''மறப்பு அருங் காதலி ஒழிய
இறப்பல்'' என்பது, ஈண்டு இளமைக்கு முடிவே.
உரை
பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - தூங்கலோரி
யாவதும் அறிகிலர், கழறுவோரே-
தாய் இல் முட்டை போல, உட்கிடந்து
சாயின் அல்லது, பிறிது எவன் உடைத்தே?
யாமைப் பார்ப்பின் அன்ன
காமம், காதலர் கையற விடினே,
உரை
வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள், ''நீ ஆற்றுகின்றிலை'' என்று.நெருங்கிய தோழிக்குச் சொல்லியது. - கிள்ளிமங்கலங் கிழார்
குன்றக் கூகை குழறினும், முன்றிற்
பலவின் இருஞ் சினைக் கலை பாய்ந்து உகளினும்,
அஞ்சும்மன்; அளித்து-என் நெஞ்சம்!-இனியே,
ஆர் இருட் கங்குல் அவர்வயின்
சாரல் நீள் இடைச் செலவு ஆனாதே.
உரை
வரையாது நெடுங்காலம் வந்து ஒழுகுகின்றுழி, ''நாம் அவரை வேறுபடுத்தற்குக் காரணம் என்னை?'' என்ற தோழிக்கு, ''அவர் வரவு நமது ஆற்றாமைக்குக் காரணம் ஆம்'' எனத் தலைமகள் கூறியது. - கபிலர்
யாங்கு அறிந்தனர்கொல்- தோழி! - பாம்பின்
உரி நிமிர்ந்தன்ன உருப்பு அவிர் அமையத்து,
இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளி,
பொறி மயிர் எருத்தின் குறு நடைப் பேடை
பொரிகாற் கள்ளி விரிகாய் அம் கவட்டுத்
தயங்க இருந்து, புலம்பக் கூஉம்
அருஞ் சுர வைப்பின் கானம்
பிரிந்து, சேண் உறைதல் வல்லுவோரே?
உரை
பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்து, தலைமகள் தோழிக்கு உரைத்தது.- மதுரைச் சீத்தலைச் சாத்தன்
முதைப் புனம் கொன்ற ஆர்கலி உழவர்
விதைக் குறு வட்டி போதொடு பொதுளப்
பொழுதோ தான் வந்தன்றே; ''மெழுகு ஆன்று
ஊது உலைப் பெய்த பகுவாய்த் தெண் மணி
மரம் பயில் இறும்பின் ஆர்ப்ப, சுரன் இழிபு,
மாலை நனி விருந்து அயர்மார்
தேர் வரும்'' என்னும் உரை வாராதே.
உரை
தலைமகள் பருவம் கண்டு அழிந்து சொல்லியது. - உரோடகத்துக் கந்தரத்தன்
பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!
செம் பூ முருக்கின் நல் நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண்டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே!
எழுதாக் கற்பின் நின் சொலுள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ? மயலோ இதுவே.
உரை
கழறிய பாங்கற்குக் கிழவன் அழிந்து கூறியது. - பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன்
''குக்கூ'' என்றது கோழி; அதன் எதிர்
துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம்-
தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே.
உரை
பூப்பு எய்திய தலைமகள் உரைத்தது. - அள்ளூர் நன்முல்லையார்
நெடு வரை மருங்கின் பாம்பு பட இடிக்கும்
கடு விசை உருமின் கழறு குரல் அளைஇக்
காலொடு வந்த கமஞ் சூல் மா மழை!
ஆர் அளி இலையோ நீயே? பேர் இசை
இமயமும் துளக்கும் பண்பினை;
துணை இலர், அளியர், பெண்டிர்; இஃது எவனே?
உரை
தலைமகன் இரவுக்குறி வந்துழி, அவன் கேட்பத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.- ஒளவையார்.
''தழை அணி அல்குல் தாங்கல் செல்லா
நுழை சிறு நுசுப்பிற்கு எவ்வம் ஆக,
அம் மெல் ஆகம் நிறைய வீங்கிக்
கொம்மை வரி முலை செப்புடன் எதிரின;
யாங்கு ஆகுவள்கொல் பூங்குழை?'' என்னும்
அவல நெஞ்சமொடு உசாவாக்
கவலை மாக்கட்டு-இப் பேதை ஊரே.
உரை
தலைமகன் சிறைப்புறமாகத் தோழி செறிப்பறிவுறுத்தது; உயிர் செல வேற்று வரைவு வரினும் அது மாற்றுதற்கு நிகழ்ந்ததூஉம் ஆம். - வடம வண்ணக்கன் பேரிசாத்தன்.
நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்
இறவின் அன்ன கொடு வாய்ப் பெடையொடு,
தடவின் ஓங்கு சினைக் கட்சியில், பிரிந்தோர்
கையற நரலும் நள்ளென் யாமத்துப்
பெருந் தண் வாடையும் வாரார்;
இஃதோ-தோழி!-நம் காதலர் வரவே?
உரை
வரைவு நீட்டிப்ப ஆற்றாளாகிய தலைமகளை நோக்கி, தோழி, ''வரைவர்'' என ஆற்றுவிப்புழி, தலைமகள் கூறியது. - மதுரை மருதன் இளநாகன்.