ஒளவையார் (பி-ம். அவ்வையார்.) (பி-ம்.) 2. வருத்தின், வருந்தின்.
(ப-ரை.) உள்ளின் உள்ளம் வேம் - தலைவரை நினைந்தால் எம் உள்ளம் வேவாநிற்கும்; உள்ளாது இருப்பின் - நினையாமல் இருப்பேமாயின், எம் அளவைத்து அன்று - அங்ஙனம் இருத்தல் எமது ஆற்றலளவிற்கு உட் பட்டதன்று; காமம் - காமநோயோ, வருத்தி- எம்மை வருந்தச் செய்து, வான்தோய்வற்று - வானத்தைத் தோய்வது போன்ற பெருக்கத்தையுடையது; யாம் மரீஇயோர் - எம்மால் மருவப் பட்ட தலைவர், சான்றோர் அல்லர் - சால்புடை யாரல்லர்.
(முடிபு) உள்ளின் உள்ளம் வேம்; உள்ளாதிருப்பின் எம் அளவைத்தன்று; காமம் வான்தோய்வற்று; மரீஇயோர் சான்றோரல்லர்.
(கருத்து) தலைவர் தம் சொற்படி மீண்டு வாராமையின் ஆற்றேனா யினேன்.
(வி-ரை.) தலைவனை நினைந்த காலத்தில் அவனது பிரிவுத்துன்பம் தோற்றுதலின் உள்ளின் உள்ளம் வேமென்றாள். உள்ளம் வேதலாவது புறத்தேதுன்பம் தோற்றாவாறு உள்ளத்துள்ளே துயரத்தை அடக்கி நிற்றல்.