என் துயரத்தை அறியாராயினமையின் அன்பின்மையையும், தமது பிரிவு நீட்டித்தலால் எனக்கு உண்டாகிய வேறுபாடுகளையறிந்த ஊரார் தம்மைத் தூற்றுதலைக் கருதாது இன்னும் ஆண்டே உறைதலின் நாணமின்மையையும், இல்லறம் நிகழ்த்துவார் உரியகாலத்தே தலைவியருடன் இருந்து இன்புறும் உலகியலை மறந்தமையால் ஒப்புரவின்மை யையும், மெல்லியலாகிய என்துயர் நீங்க வாராமையின் கண்ணோட்ட மின்மையையும், தாம் கூறிய காலத்தில் மீளாமையின் வாய்மையின்மையையும் உடையரென்னும் கருத்தை உள்ளிட்டுச் சான்றோரல்லர் எனக் கூறினள்; “அன்புநா ணொப்புரவு கண்ணோட்டம் வாய்மையோ, டைந்துசால் பூன்றிய தூண்” (குறள், 983) என்பதை அறிக.
ஏகாரங்கள் அசைநிலை.
மேற்கோளாட்சி 1. கீழ்க்கதுவா யெதுகை வந்தது (தொல்.செய். 93, ந.); காதல் கைமமிகலென்னும் மெய்ப்பாடு வந்தது (சீவக. 996, ந.)
2-3. தொழில் நிகழ்த்தற்குரிய அல்லாப் பொருளை நிகழ்த்தினபோலக் கூறியது (தொல். பொருள் 19, ந.)
மு. காதல் கைம்மிகலென்னும் மெய்ப்பாடு வந்தது (தொல். மெய்ப். 23, பேர்.; இ.வி.580); வருத்தமிகுதியால் தலைவனை வழிபடுதலை மறுத்துத் தலைவி கூறியது (தொல். களவு. 20, ந.)
ஒப்புமைப் பகுதி 1. உள்ளின் உள்ளம் வேம்: (குறுந். 150:4); “உள்ளி னுள்ளம் வேமே” (நற். 184:6); “உள்ளினு முள்ளஞ் சுடும்” (குறள். 1207); “கருதின்வே முள்ளமும்” (கம்ப. தாடகை. 5.)
3. காமத்தின் பெருக்கம்: குறுந். 18:5.
காமம் வான்தோய்வற்று : குறுந். 99:4-6.
4. தலைவன் சான்றோனல்லனெனப்படுதல்: நற். 233:8-9, 365: 8-9
(102)
(கூதிர்ப்பருவம் வந்தபின்பும் தலைவன் வாராமையினால் துன்புற்ற தலைவி தோழியை நோக்கி, “இவ்வாடைக் காலத்திலும் மீண்டு வாராராயினர்; இனி யான் பிரிவாற்றாது உயிர் நீங்குவேன்” என்று கூறியது.) 103. | கடும்புன றொகுத்த நடுங்கஞ ரள்ளற் |
| கவிரித ழன்ன தூவிச் செவ்வாய் |
| இரைதேர் நாரைக் கெவ்வ மாகத் |
| தூஉந் துவலைத் துயர்கூர் வாடையும் |
5 | வாரார் போல்வர்நங் காதலர் |
| வாழேன் போல்வ றோழி யானே. |
என்பது பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
வாயிலான் தேவன். (பி-ம்.) 1. ‘றொடுத்த’