(கருத்து) தலைவனை நாம் ஏற்றுக் கொள்வோமாக.
(வி-ரை.) தலைவன் பரத்தையிற் பிரிந்தானாக அவன் அன்பிலனென் றெண்ணிய தலைவியின்பால் அவன் விடுத்த தூது, “தலைவன் தலை நாளன்ன அன்பினன்; அவனை ஏற்றருள வேண்டும்’’ என்று கூறியது கேட்ட அவள், “அவன் அத்தகையனாயின் நாமும் மணநாளின்கண் வைத்திருந்த அன்பிற்குறைவின்றியுள்ளேமென்று தூது விடுவேம்” என்று தோழிக்குக் கூறியது இது.
தீதில் நெஞ்சத்துக்கிளவியென்றது தலைவன் நெஞ்சாற் பிழைப்பிலனென்று தலைவி உணர்ந்தமையைப் புலப்படுத்தியது. நாமும்: உம்மை இறந்தது தழீஇயது. தலைவன் மணந்த காலத்தில் நிறைந்த அன்போடி ருந்தவாறே இப்பொழுதும் குறைவின்றி யிருப்பேமென்றமையின் அவனை ஏற்றுக்கோடற் குறிப்புப் பெறப்பட்டது. மணந்த காலத்தை நினைவு கூர்ந்த தலைவிக்கு அந்நினைவின் மிகுதியே நெய்பெய் தீயை உவமை கூறச் செய்தது.
ஏகாரம் அசைநிலை.
மேற்கோளாட்சி மு. தூதுமுனிவின்மை வந்தது (தொல். களவு. 21, இளம்.); ‘அது கற்பிற் கல்லது ஏலாது; என்னை? களவினுள் நெய்பெய் தீயின் எதிர் கொள்ளலாகாமையின்’ (தொல். மெய்ப். 23, பேர்.); தூது கண்டு தலைவி கூறியது (தொல். கற்பு. 6, ந.)
ஒப்புமைப் பகுதி 1. புல்வீழிற்றி: “குறுங்கா லிற்றிப் புன்றலை நெடுவீழ்” (அகநா.57:6.)
இற்றியின் வீழ்: “ஒல்குநிலை யிற்றி யொருதனி நெடுவீழ்” (அகநா. 345:19.)
5. நெய்பெய் தீ: “நெருப்பழற் சேர்ந்தக்கா னெய்போல் வதூஉம், எரிப்பச்சுட் டெவ்வநோ யாக்கும்” (நாலடி. 124.)
(106)
(பொருள்வயிற் பிரிந்த தலைவன் மீண்டு வரப்பெற்று அவனோடு இன்புற்ற தலைவி பொழுது புலர்ந்தமையால் துயருற்று, “எம்மைத் துயிலினின்றும் எழுப்பிய சேவலே! நீ இறந்து படுவாயாக” என்று கூறித் தன் காமமிகுதியைப் புலப்படுத்தியது.) 107. | குவியிணர்த் தோன்றி யொண்பூ வன்ன |
| தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல் |
| நள்ளிருள் யாமத் தில்லெலி பார்க்கும் |
| பிள்ளை வெருகிற் கல்கிரை யாகிக் |
5 | கடுநவைப் படீஇயரோ நீயே நெடுநீர் |
| யாண ரூரன் றன்னொடு வதிந்த் |
| ஏம வின்றுயி லெடுப்பி யோயே. |
என்பது பொருள் முற்றி (பி-ம். பொருள் முடித்து) வந்த தலைமகனை யுடைய கிழத்தி காமமிக்க கழிபடர் கிளவியாற் கூறியது.