பக்கம் எண் :


222


(தலைவன் வரைந்து கொள்ளாமல் நெடுநாள் ஒழுகினானாக, “நான் ஊரார் அலருக்கு அஞ்சி மறைந்து ஒழுகுகின்றேன்; என் காமம் மெலிகின்றது; அதனை முற்றும் விடும் நிலையைப் பெறும் ஆற்றலில்லேன்” என்று கூறித் தலைவி வருந்தியது.)
 112.    
கௌவை யஞ்சிற் காம மெய்க்கும் 
    
எள்ளற விடினே யுள்ளது நாணே 
    
பெருங்களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ 
    
நாருடை யொசிய லற்றே 
5
கண்டிசிற் றோழியவ ருண்டவென் னலனே. 

என்பது வரைவு நீட்டித்த வழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

ஆலத்தூர்கிழார்.

     (பி-ம்.) 3. ‘நிலம்படர’்; 4. ‘நாளுடை’.

     (ப-ரை.) தோழி---, கௌவை அஞ்சின் - பிறர் கூறும் பழி மொழியை அஞ்சினால், காமம் எய்க்கும் - காமம் மெலிவடையும்; எள் அற விடின் - பிறர் இழித்தல் அறும்படி அக்காமத்தை விட்டு விடின், உள்ளது நாணே - என்பால் இருப்பது நாண மட்டுமே ஆகும்; அவர் உண்ட என் நலன் - தலைவர் நுகர்ந்த எனது பெண்மை நலம், பெரு களிறு வாங்க - பெரியகளிறு உண்ணும் பொருட்டு வளைக்க, முரிந்து - வளைந்து, நிலம் படாஅ - நிலத்திற்படாத, நாருடை ஒசியல் அற்று - பட்டையை உடைய ஒடிந்த கிளையைப் போன்றது: கண்டிசின் - இதனைக் காண்பாயாக.

     (முடிபு) தோழி, கௌவை அஞ்சின் காமம் எய்க்கும்; விடின் நாணே உள்ளது; அவர் உண்ட நலன ஒசியலற்று; கண்டிசின்.

     (கருத்து) ஊரார் அலரை அஞ்சிக் காமத்தை மிகுதியாக வெளிப்படுத்தாமல் இருக்கின்றேன்.

     (வி-ரை.) கௌவை - பலர் கூறும் பழிமொழி. “என்பாலுள்ள காமத்தினால் உண்டாய வேறுபாடுகளை ஊரினர் அறிந்து பழிமொழி கூறுகின்றனர்; அப்பழிமொழிக்கு அஞ்சுவேன் ஆயின் என்பால் உள்ள காமம் குறைவுபடும்; அக்கவ்வை சிறிதேனும் உண்டாகாமலிருத்தற் பொருட்டு என் காமத்தை முற்றும் விடின் என்பால் எஞ்சியிருப்பது நாணம் ஒன்றுமேயாகும்; எனது பெண்மை நலனும் கற்பும் அழிந்து விடும். பெண்மை நலன் முன்னரே தலைவரால் உண்ணப்பட்டுச் சிறிதளவு எஞ்சி நிற்கின்றது” என்று தலைவி கூறினாள்.

     காமத்தை விடுவதாற் பயனில்லை யென்பது தலைவி கருத்து. கௌவையும் காமமும் ஒன்றுக்கொன்று முரணாக இருந்து தலைவியைத் துன்பத்துக்கிடமாக்கின;