| “நலிதருங் காமமுங் கௌவையு மென்றிவ் |
| வலிதி னுயிர்காவாத் தூங்கியாங் கென்னை |
| நலியும் விழும மிரண்டு” (கலி. 142:56-8) |
என்பதில் இக்கருத்து விளக்கமாக அமைந்துள்ளது.
கௌவையும் நாணும் காமத்தைப் பெருகவிடாமல் தடை பண்ணுவன (குறள். 1163.)
களிறு வளைத்துத் தழைகளை உண்டதனால் ஒடிந்த மரக்கிளை ஆனது தன்னுடைய இயல்பான நிலையை ஒழிந்து மீட்டும் அந்நிலையைப் பெறாத வண்ணம் இருப்பினும், முற்ற ஒடிந்து கீழே விழுந்து வாடி உலராமல் நாரின் தொடர்பினால் மீண்டும் தழைக்கும் நிலையில் இருத் தலைப்போல, தலைவனால் உண்ணப்பட்ட நலன் தன் பண்டை நிலைமையைப் பெறாத நிலையிலிருப்பினும், முற்றும் அழிந்தொழியாமையால் தலைவர் வரைவார் என்னும் கருத்தினால் பின் சிறக்கத்தக்க நிலையில் அமைந்துள்ளதென்று உவமையை விரித்துக்கொள்க.
உண்ட நலனென்றது உண்ணப்படுவதற்குரியதல்லாத பொருளைப் பிறர் உண்டதுபோலக் கூறும் மரபுபற்றி வந்தது (தொல். பொருள். 21, ந.)
இசின்: முன்னிலையில் வந்தது. நானே : ஏகாரம் பிரிநிலை; ஏனை ஏகாரங்கள் அசைநிலைகள்.
மேற்கோளாட்சி மு. தலைவனை வழிபடுதலை மறுத்த தலைவியே அவனை ஏற்றுக் கோடலை விரும்பியபோது கூறியது; ‘இது நாணே உள்ளது; கற்புப் போமென்றலின் மறுத்தெதிர் கோடலாம்’ (தொல். களவு. 20, ந.)
ஒப்புமைப் பகுதி 2. காமமும் நாணமும்: குறுந். 149:1-6; “காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே, யானோ பொறெனிவ் விரண்டு” (குறள். 1247.)
5. கண்டிசிற்றோழி : குறுந். 220:7, 240:5.
தலைவன் உண்ட நலம்: குறுந். 236:6; நற். 15:4.
(112)
(பகற்குறியின்கண் வந்து அளவளாவிய தலைவனுக்குத் தாம் பயிலும் இடத்தை மாற்றி வேறிடங்கூறுவாளாய், “தலைவி காட்டாற்றங் கரையிலுள்ள பொழிலுக்கு எம்முடன் வருவாள்” என்று ஆண்டு வரும் வண்ணம் குறிப்பாகத் தோழி கூறியது.) 113. | ஊர்க்கு மணித்தே பொய்கை பொய்கைக்குச் |
| சேய்த்து மன்றே சிறுகான் யாறே |
| இரைதேர் வெண்குரு கல்ல தியாவதும் |
| துன்னலபோ கின்றாற் பொழிலே யாமெம் |
5 | கூழைக் கெருமண் கொணர்கஞ் சேறும் |
| ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே. |
என்பது பகற்குறி நேர்ந்த தலைமகற்குக் குறிப்பினாற் குறியிடம் பெயர்த்து (பி-ம். குறிப்பிடம் பெயர்த்து)ச் சொல்லியது.