பக்கம் எண் :


229


    6. தலைவி தலைவனை யன்றிப் பாதுகாப்பார் பிறரிலள் : குறுந். 397:7-8; “தம்மின் றமையா நந்நயந் தருளி” (நற். 1:7); “இவளே நின்னல திலளே” (இறை. 23, மேற்.)
(115)
  
(ஊழ்வலியால் தலைவியைக் கண்டு அளவளாவிய தலைவன் அவளது கூந்தற் சிறப்பைப் பாராட்டி நெஞ்சிற்குக் கூறியது.)
 116.   
யானயந் துறைவோ டேம்பாய் கூந்தல் 
    
வளங்கெழு சோழ ருறந்தைப் பெருந்துறை  
     
நுண்மண லறல்வார்ந் தன்ன  
    
நன்னெறி யவ்வே நறுந்தண் ணியவே.  

என்பது இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்குந் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

இளங்கீரன்.

     (பி-ம்.) 3. ‘லறலார்ந் தன்ன’’.

     (ப-ரை.) நெஞ்சே, யான் நயந்து உறைவோள் - என்னால் விரும்பப் பெற்றுத் தங்கும் தலைவியினது, தேம்பாய் கூந்தல் - வண்டுகள் தாவுகின்ற கூந்தல், வளம் கெழு - வளப்பம் பொருந்திய, சோழர் உறந்தை பெரு துறை - சோழரது உறையூரிற் பெரிய நீர்த்துறைக்கண் உள்ள, நுண் மணல் அறல் - நுண்ணிய கருமணல், வார்ந்தன்ன -நீண்டு படிந்தாற் போன்ற, நல்நெறிய -நல்ல நெறிப்பை உடையன; நறு தண்ணிய -நறுமையும் தண்மையும் உடையன.

     (முடிபு) யான் நயந்துறைவோள் கூந்தல் நன்னெறிய; நறுந் தண்ணிய.

     (கருத்து) தலைவியின் கூந்தல் நெறிப்பையும் நறுமணத்தையும் தண்மையையும் உடையன.

     (வி-ரை.) யான் நயப்ப உறைவோளென எச்சத்தைத் திரித்துப் பொருள் கொள்ளலும் ஆம். கூந்தலென்றது கூந்தலின் ஐவகைப் பகுப்புக் களை யாதலின் பன்மையால் முடித்தான். வளங்கெழு என்றது உறந்தைக்கு அடை. உறந்தைப் பெருந்துறை என்றது காவிரித்துறையை. நெறிப்பு - படிப்படியாய் நீரோட்டத்தினால் மணலில் உண்டாகும் சுவடு; இது பற்றம் என்றும் கூறப்படும்.

     இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைவன், தலைவியின் கூந்தலாகிய மெல்லணையில் துஞ்சி இன்புற்றவன் ஆதலின் அக் கூந்தலின் இயல்புகளை நினைந்து, இவற்றாற் பெறும் இன்பத்தை இடைவிடாமல் நுகரும் பேறு பெற்றிலேமே என்னும் இரக்கக் குறிப்புப்பட இதனைத் தன் நெஞ்சிற்குக் கூறினான்.