கின்றனிரோ என்று கேட்கவும், நம் காதலோர் - நம் தலைவர், வாரார் - வாரார் ஆயினர்.
(முடிபு) தோழி, மாலையில் கடவுநர், வருவீர் உளீரோ எனவும் நம் காதலோர் வாரார்.
(கருத்து) நம் தலைவர் இன்றும் வந்திலர்.
(வி-ரை.) தலைவன் வரைந்து கொள்ளாமல் நெடுங்காலம் இருந்தானாக, அவன் வரைவொடு புகுதுவான் என்று ஒவ்வொரு நாளும் எதிர் பார்த்திருக்குந் தலைவி மாலைப்பொழுது கண்டு அவன் வாராமையினால் துன்புற்று, “இன்றும் தலைவர் வந்திலர்” என இரங்கிக் கூறினாள்.
தனக்குத் துன்பம் பயப்பதுபற்றி மாலையை நாரின் மாலையென்றாள், தன் வீட்டில் விருந்தினர் பலர் வந்து உண்ணுவாராதலின் அவர் தடையின்றிப் புகும் வாயிலைப் பலர் புகுவாயிலென்றாள். இராக் காலத்தில் விருந்தினர்களைப் புகவிட்டுப் பின்னும் எவரேனும் உள்ளாரோ என ஆராய்வாராகி ஏவலாளர்கள் வினவி, ஒருவரும் இலராக வாயிற்கதவை அடைத்தனர். தலைவன் வந்திருப்பின் விருந்தினர் கூட்டத்தில் ஒருவனாகப் புகுவான் (தொல். களவு. 16); அவன் அங்ஙனம் புகவில்லை ஆதலின், அவர் வந்திலரென்று தலைவி கூறினாள்.
‘வாயில் அடையக் கடவுநர்’ என்பது பாடமாயின் வாயிலின்கண் உள்ளாரை ஒருவர் விடாமல் முற்றவும் ஆராய்வாராய், “வருபவர்கள் உளீரோ?” என்று கேட்பவும் தலைவர் வந்திலரென்று பொருள் கொள்க.
ஏகாரம் ஈற்றசை.
ஒப்புமைப் பகுதி 1. புள்ளும் மாவும் : “மாவும் புள்ளும் வதிவயிற் படர” (யா. வி. 35, மேற்.); “விலங்கும் பறவையும் வீழ்பதிப் படர” (பெருங். 1.33:43, பி-ம்.)
2. நள்ளென வந்த மாலை : குறுந். 6:1, ஒப்பு; 160:4, ஒப்பு.
3. பலர் புகுவாயில் : “வருநர்க்கு வரையா வளநகர் பொற்ப, மலரத் திறந்த வாயில் பலருண” (குறிஞ்சிப். 202-3); “உலகுபுகத்திறந்த வாயிற், பலரோ டுண்டன் மரீஇ யோனே” (புறநா. 234:5-6); “பலர்புகத் திறந்த பகுவாய் வாயில்” (மணி. 7:92, 17:77)
(118)
(இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து மீண்ட தலைமகனது வேறுபாடு கண்ட பாங்கன், “நினக்கு இஃது எற்றினான் ஆயிற்று?” என்றவழி, “ஓர் இளைய மகளால் ஆயிற்று” என்று தலைவன் கூறியது.) 119. | சிறுவெள் ளரவி னவ்வரிக் குருளை |
| கான யானை யணங்கி யாஅங் |
| கிளையண் முளைவா ளெயிற்றள் |
| வளையுடைக் கையளெம் மணங்கி யோளே. |
என்பது இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்குந் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.