பக்கம் எண் :


245


ஏகாரம் பிரிநிலை. உளெனே: ஏகாரம் அசை நிலை; இரக்கக்குறிப்புமாம். வாழி: அசைநிலை. உளெனே யென்றது உயிர் விடும் நிலையினேன். என்னும் குறிப்பைப் புலப்படுத்தியது. தழை - தழையாலும் மலராலும் அமைத்து மகளிர் உடுக்கும் ஒருவகை ஆடை; இது மிகுதிபற்றி வந்தபெயர்.

     விறல் - மிடுக்கு. வலம் - வெற்றி; இங்கே அதற்குக் காரணமாகிய வலிக்கு ஆயிற்று. மரம் கரையிலிருப்பினும் அதன் கிளை அலைவந்து தோயுமாறு வளைந்தது.

     கண்மாறுதல் - இடமாறுதல். மாறின்று - மாறியது; ஏகாரம் ஈற்றசை.

     தலைவன் என் நலம்கொண்டா னாதலின் அஃது என்னிடத்தினின்றும் பிரிந்து அவனோடு போய்விட்டதென்று தலைவி கூறினாள்.

     நாரை தன் பழைய சிறைவலி கெட்டுத் திரை தானே கொணர்ந்து தரும் மீனைப்பெற்றாலன்றி வேறு இரைபெறாத நிலையில் (குறுந்.166) திரைதோயும் சினையில் இருத்தலைப் போல, யான் என் பழைய நலனை இழந்து தலைவன் தானே உளமிரங்கிச் செய்யும் தண்ணளியை எதிர்நோக்கி ஈண்டுள்ளேனென்பது குறிப்பு. அத்திரை, மீனைத் தாராதொழியின் நாரை இரையின்றி உயிர்நீத்தலைப் போலத் தலைவன் இரங்கி வரைந்து கொள்ளானேல் யானும் உயிர்விடுவேனென்னும் குறிப்புங் கொள்க.

     ஒப்புமைப் பகுதி 1. வளை நெகிழ்தல் : குறுந்.11:1, ஒப்பு.

     2. உளெனே : குறுந். 133:4, 310:5.

     3. தழையணி யல்குல் மகளிர் : குறுந். 159:1, 214:4, 294:5-7; குறிஞ்சிப்.102; ஐங்.72:1-2.

     தழையணி மகளிர் : குறுந். 295:1-2, 342:5.

     4. நலத்தின் சிறப்பு: குறுந். 245:1-2.

     மேம்பட்ட நலன்: “விறனலன்” (கலித். 3:5.)

     5. பறை: குறுந். 166:1, 172:1.

     பறை வலந் தப்பிய நாரை: (குறுந். 128:1); “பறைதபு முது குருகு” (ஐங்.180:3.)

     7. கண்மாறல்; மதுரைக்.642; கலித்.46:18; அகநா.144:6, 337:18; புறநா.143:4.

     4-7. நலன் தலைவனொடு நீங்கல்: குறுந். 54:1-5, ஒப்பு.

(125)
  
(தலைவி மீண்டுவருவேனெனக் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்த பின்பும் அவன் வாராமையால் வருந்திய தலைவி தோழியை நோக்கி, “கார்ப்பருவம் வந்துவிட்டது; முல்லைக் கொடிகள் அரும்பின; தலைவர் இன்னும் வந்திலர்” என்று கூறியது.)