பக்கம் எண் :


249


(தலைவன் தலைவியைக் குறியிடத்திற் காணாது மீளும் பொழுது நெஞ்சை நோக்கி, “இனி தலைவி காண்டற் கரியள்; நீ துன்புறற்குரியை” என்று கூறியது.)
 128.   
குணகடற் றிரையது பறைதபு நாரை  
    
திண்டேர்ப் பொறையன் றொண்டி முன்றுறை 
    
அயிரை யாரிரைக் கணவந் தாங்குச் 
    
சேய ளரியோட் படர்தி 
5
நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே. 

என்பது (1) அல்லகுறிப்பட்டு மீளும் தலைமகன், தன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது.

    (நெருங்கிச் சொல்லல் - இடித்துரைத்தல். மு. அகநா. 212, கருத்து.)

    (2) இஃது உணர்ப்புவயின் வாரா ஊடற்கண், தலை மகன் கூறியதூஉமாம்.

     (உணர்ப்புவயின் வாரா ஊடல் - தலைவி ஊடினாளாக அவள் ஊடற்குக் காரணமாகக் கூறிய குற்றங்கள் தன்பால் இல்லை யென்று தெளிவித்த பின்பும் தன் குறிப்புக்கு உடன்பட்டு வாராத ஊடற் காலத்து.)

பரணர்.

     (பி-ம்.)2. ‘திண்டோட்’.

     (ப-ரை.) நெஞ்சே---, குணக்கு கடல் திரையது - கீழ் கடல் அலைக்கு அருகிலுள்ளதாகிய, பறைதபு நாரை - முதுமையால் சிறகுகள் நீங்கப்பெற்ற நாரை, திண் தேர் பொறையன் - திண்மையாகிய தேரையுடைய சேரனது, தொண்டி முன்துறை - மேல்கடற் கரையிலமைந்த தொண்டி யென்னும் பட்டினத்தின் கடற்றுறையின் முன் உள்ள, அயிரை அரு இரைக்கு - அயிரை மீனாகிய பெறற்கரிய உணவைப் பெறும்பொருட்டு, அணவந்தாங்கு - தலையை மேலே எடுத்தாற்போல, சேயள் அரியோள் - நெடுந்தூரத்திலுள்ளவளும் பெறற்கரியவளுமாகிய தலைவியை, படர்தி - பெறுவதற்கு நினைந்தாய்; நோயை - நீ வருத்தத்தையுடையை, நோய் பாலோய் - துன்பத்துக்குக் காரணமாகிய ஊழ்வினையையுடையை.

     (முடிபு) நெஞ்சே, அரியோட் படர்தி; நோயை; நோய்ப்பாலோய்.

     (கருத்து) இனித் தலைவி நாம் பெறற்கரியள்.

     (வி-ரை.) தலைவன் அல்லகுறிப்பட்டு மீள்பவனாதலின், ‘இனித் தலைவியைப் பெறுதல் அரிது போலும்!’ என்று எண்ணிக் காமமயக்கத்தால் நெஞ்சை நோக்கிக் கூறுவானாகி, “நீ கிட்டுதற்கரிய தொன்றை அவாவி வருத்தமுறுகின்றாய்; உன் தலையெழுத்து இதுதான்” என்று இடித்துக் கூறியது இது.