ஓரேரும் அதனால் உழப்படும் சிறு நிலமும் உடையவனைக் குறித்தது. விதுப்பு - விரைவு; விதும்பென்பது இதன் வினைப்பகுதி.
ஏகாரங்களும் ஓகாரமும் அசைநிலைகள்.
தன் நெஞ்சு விரையவும், தான் உடனே சென்று காண்பதற்குரிய நிலையில் இன்மையின் நோகோ யானே யென்றான்.
மேற்கோளாட்சி மு. தலைமகன் தலைமகள் வாழும் ஊர்நோக்கி மதிமயங்கியது (நம்பி. 156.)
ஒப்புமைப் பகுதி 1. ஆடமை: குறுந். 115:4, ஒப்பு.
ஆடமைத்தோள்: “ஆடமைத் தோளி” (பு.வெ.264); “ஆடமைத்தோ ணல்லார்” (நன். 55.)
மகளிர் தோளுக்கு மூங்கில்: குறுந்.268:6. ஒப்பு.
2. பேரமர்க் கண்ணி: குறுந். 286:4, கலி. 74:14; புறநா. 71:6; குறள்.1083.
3. நெடுஞ்சே ணாரிடை : அகநா.3:18.
5. ஓரேருழவன்: ‘ஓரேர்க்காரன் உழுது கெட்டான்; அஞ்சேர்க்காரன் அமர்த்திக் கெட்டான்’ (ஒரு பழமொழி.)
6. விதுப்புறுதல் : அகநா. 136:8.
4-6 ஈரங்கண்டு உழவன் விரைதல்: “மாவீரம் போகுதென்று விதைகொண் டோட” (தனிப்.)
சிறுநில முடைய உழவன் அந்நிலத்தைப் பாதுகாத்தல்: “வறிஞ னோம்புமோர், செய்யெனக் காத்து” (கம்ப. அரசியற். 12); “மிடிய னொருசெய் யாளனச்செய் விளையக் காக்குஞ் செயல்போல” (பிரபு.மாயை உற்பத்தி. 49.)
6. நோகோ யானே: குறுந். 178:7, 212:5; நற். 26:1, 108:9, 257:10, 312:1, 394:9; ஐங். 107:4; அகநா. 137:16; புறநா. 116:9, 234:1.
(131)
(பேரறிவுடைய நீ ஒரு மகள் திறத்து உள்ளமுடைதல் அழகோவென இடித்துரைத்த பாங்கனை நோக்கித் தலைவியின் இயல்பும் வனப்பும் கூறி, “ இத்தகைய தன்மையுடையாளை யான் எங்ஙனம் மறந்தமைவேன்!” என்று தலைவன் சொல்லியது.) 132. | கவவுக் கடுங்குரையள் காமர் வனப்பினள் |
| குவவுமென் முலையள் கொடிக்கூந் தலளே |
| யாங்குமறந் தமைகோ யானே ஞாங்கர்க் |
| கடுஞ்சுரை நல்லா னடுங்குதலைக் குழவி |
5 | தாய்காண் விருப்பி னன்ன் |
| சாஅய்நோக் கினளே மாஅ யோளே. |
என்பது கழற்றெதிர்மறை.