பாலைபாடிய பெருங்கடுங்கோ. (பி-ம்.)4.’அழாற்றோழி’,
(ப-ரை.) தோழி---, வினையே - தொழில் தான், ஆடவர்க்கு உயிர் - ஆண்மக்களுக்கு உயிர் ஆகும்; வாணுதல் - ஒளிபொருந்திய நெற்றியையுடைய, மனையுறை மகளிர்க்கு - இல்லின் கண் உறையும் மகளிர்க்கு, ஆடவர் உயிர் என - கணவன்மாரே உயிர் ஆவரென்று, நமக்கு உரைத்தோரும் தாமே - நமக்கு எடுத்துக் கூறியவரும் அத்தலைவரே; அழாஅல் - அழுதலையொழிவாயாக; செலவு அழுங்குவர் - அவர் செல்லுதலைத் தவிர்வர்.
(முடிபு) தோழி, உரைத்தோரும் தாமே; அழாஅல்; செலவு அழுங்குவர்.
(கருத்து) தலைவர் உன்னைப் பிரியாராதலின் நீ வருந்தற்க.
(வி-ரை.) தலைவன், “ஆடவர்க்கு வினை உயிர்” என்று கூற அதனால், “இவன் வினைமேற் பிரியக் கருதினான்” என்று எண்ணித் தலைமகள் வேறுபட்டாள். அதுகண்ட தோழி, “வினையே ஆடவர்க்கு உயிரென்ற தன்றி, மகளிர்க்கு ஆடவரே உயிரென்றும் அவர் கூறியுள்ளார்; ஆதலின் அவர் உடலாகிய நின்னைவிட்டுப் பிரியார்; நீ வருந்தாதே” என்று கூறி ஆற்றுவித்தாள். இது கற்புக் காலத்தது.