பாலை பாடிய பெருங்கடுங்கோ. (பி-ம்.) 1. ‘புலம்பல’்; 4.’செலாஅது தகவே’.
(ப-ரை.) மெல் இயல் அரிவை - மென்மைத் தன்மையையுடைய அரிவையே, நின் நல் அகம் புலம்ப - நின் நல்ல நெஞ்சம் தனிமையால் வருந்த, நின் துறந்து - நின்னைப் பிரிந்து சென்று, அமைகுவென் ஆயின் - சென்ற இடத்தே மனம் பொருந்தி இருப்பேனாயின், யான் செலவுறு தகவு - யான் அங்ஙனம் செல்வதற்குற்ற தக்க வினையின் கண், என் துறந்து இரவலர் வாரா வைகல் பல ஆகுக - என்னை நீங்கி இரப்போர் வாராத நாட்கள் பல வாகுக!
(முடிபு) அரிவை, நின் அகம் புலம்ப நிற்றுறந்து அமைகுவெனாயின் யான் செலவுறு தகவு இரவலர் வாரா வைகல் பலவாகுக.
(கருத்து) நின்னைப் பிரியேன்; பிரியின் அறப்பயனை இழந்தவனாவேன்.
(வி-ரை.) மெல்லியலரிவை யென்றதும் நல்லகமென்றதும் என் பிரிவால் துன்பத்தைத் தாங்கற் கேற்ற ஆற்றலுடையாயல்லை யென்னும் கருத்துடையன. அரிவையென்றது இங்கே பருவங் குறித்ததன்று.
எற்றுறந்து - என்னை நெடுந்தூரத்திலே மனத்தால் துறந்து.
| “ஒல்வ, கொடாஅ தொழிந்த பகலு முரைப்பிற் |
| படாஅவாம் பண்புடையார் கண்” (நாலடி. 169) |
என்பவாதலின் ஈதலில்லா நாள் நன்னாளன்று. யான் வினை மேற்கொண்டு செல்வேனாயின் அங்ஙனம் செல்லுமிடத்தில் இரவலரைப் பெறாத துன்பத்தை யானடைகவென்பது கருத்து.
யான் செலவுறு தகவானது இரவலர் வாரா வைகல் பலவற்றின் பயனை உடையதாகுக வென்றும் பொருள் கூறுதல் பொருந்தும்.