தொல்கபிலர். (பி-ம்.) 1. ‘அமிர்துபொதி’, ‘வஞ்சி’ 4-5. ‘மறுகு நல்லோர்’ 6. ‘கூறுகயாஅநாணுகஞ்’, ‘கூறயாநண்ணுகஞ்’.
(ப-ரை.) அமிழ்து பொதி- அமுதத்தின் இனிமை நிரம்பிய, செ நா- செவ்விய நாவானது, அஞ்ச- அஞ்சும்படி, வந்த-முளைத்த, வார்ந்து இலங்கு- நேராகி விளங்குகின்ற, வை எயிறு- கூர்மையாகிய பற்களையும், சின்மொழி- சிலவாகிய சொற்களையும் உடைய, அரிவையை-தலைவியை,யான் பெறுகதில்- நான் மடன்மா ஏறுதலாற் பெறுவேனாக; பெற்றாங்கு-பெற்றபின்பு, இ ஊர்- இந்த ஊரில் உள்ளார், அறிகதில்- அறிவாராக; பல்லோர்-பலர், மறுகில்- வீதியில், நல்லோள் கணவன் இவன் எனக் கூற-இந்த நல்லாளுடைய தலைவன் இவன் என்று சொல்லா நிற்க, யாம் சிறிது நாணுகம்-நாம் சிறிது நாணுவேம்!
(முடிபு) யான் பெறுக; ஊர் அறிக; பல்லோர் கூற யாம் நாணுகம்.
(கருத்து) யான் மடல் ஏறுவேன்.
(வி-ரை.) அமிழ்து என்றது எயிற்றில் ஊறிய நீரை. அமிழ்து பொதி எயிறு, வந்த எயிறு எனக் கூட்டுக. பற்கள் கூரியனவாதலின் நா அஞ்சியது;அஞ்சினமையின் அது சில மொழி கூறியது. அரிவை என்றது பருவம் குறியாமல் பெண் என்னும் துணையாய் நின்றது, ‘‘செறியெயிற் றரிவை’’