பக்கம் எண் :


274


என்றாள், என நீ சொல்லின் எவன் - எனவும் நீ தலைவனுக்குக் கூறின் வரும் குற்றம் யாது?

     (முடிபு) தோழி, ‘சாரனாட, நடுநாள் வருதி; வாரல்’ எனவும், ‘அன்னை செல்கென்றோள்’ எனவும் சொல்லின் எவன்?

     (கருத்து) தலைவரை இனிப் பகற்குறிக்கண் வரும்படி நீ சொல்ல வேண்டும்.

     (வி-ரை.) கிளி, விளைந்த தினையின்கண் அதனை உண்ணும் பொருட்டுப் படியும். விளை தினையைக் கொய்து உண்ணும் கருவி யுடையதென்பாள், ‘வளைவாய்ச்சிறுகிளி’ என்றாள். கடீஇயர் - கடியும் பொருட்டு. குறிஞ்சிநில மகளிர் தினைப்புனம் காத்தலும், அப்புனத்திற் படியும் கிளி முதலியவற்றைத் தட்டை, கவண் முதலிவயற்றாற் கடிதலும் இயல்பு.

     என்றோளே: ஏ, அசை நிலை, எவனோ: ஓ, அசை நிலை. கொல்லை யென்றது இங்கே புனத்தை. குறுங்கை: கையென்றது முன்கால்களை. படுபதம் - கண்படுக்கும் செவ்வி யெனலும் ஆம். நீ வரும் வழி இத்தகைய ஏதமுடையதென்பாள் புலியின் செயலைக் கூறினாள். வாரலோ: ஓகாரம் அசைநிலை. எனவே: ஏ ஈற்றசை, ‘வாரலோ வெனவும் செல்கெனறோளே யெனவும் சொல்லின்’ என்னும் உம்மைகள் தொக்கன.

     அன்னை தினைக்காக்கும் பொருட்டு எம்மைச் செல்லச் சொன்னா ளென்றதன் குறிப்பு, நீ இனி ஈண்டு இரவில் வாராது ஆண்டுப்பகலில் வருகவென்பது.

     மேற்கோளாட்சி மு. பொழுதும் ஆறும் புரைவதன்மையின் அழிவுதலை வந்த சிந்தைக்கண் தலைவி கூறியது (தொல்.களவு. 21, இளம், 20, ந.) தலைமகள் குறிவிலக்கு வித்தது (நம்பி. 164, இ.வி. 521.)

     ஒப்புமைப் பகுதி 1. வளைவாய்ச் சிறுகிளி: குறுந். 67:1-2, ஒப்பு. ‘வளைவாய்க்கிளை” (ஐந். எழு. 13.)

     3. சொல்லினெவனோ: ஐங். 399:3.

     5. மு. நற். 36:1; ஐங். 216:1.

     குறுங்கை யிரும்புலி: “குறுக்கை யிரும்புலி பொரூஉ நாட” (ஐங். 266:2.)

     புலிக் கோள்வ லேற்றை: “கோள்வல் புலியதளும்” (திணை மாலை. 22.)

     கோள்வ லேற்றை: அகநா. 171:9.

     4-5. களிறு புலியொடு பொருதல்: குறுந். 88:2-3, ஒப்பு.

(141)
  
(தலைவியைப் பால் வயத்தனாகிக் கண்டு அளவளாவி நீங்குந் தலைவன், “என் உள்ளம் தலைவியினிடத்தே உள்ளது; இதனை அவள் அறிந்தனளோ, இலளோ!” எனக் கூறியது.)