பசலை உண்டாவதும், அவனோடு பொருந்திய காலத்தில் அது நீங்குவதும் மரபு; இதனை இந்நூல் 399-ஆம் செய்யுளால் நன்குணரலாகும். பசலை நீங்குமென்று தோழி கூறியது. இந்நீக்கத்திற்குக் காரணமாகிய தலைவர் வரவு உண்டாகுமென்னும் கருத்தை நினைந்தே.
அம் கலுழ்மேனி யென்றது பசலை பரவாது இயல்பான அழகுடன் நின்ற மேனியை; அழகுதான் தங்குதற்குரியது, அதனை மறைக்கும் பசலை தங்குதற்குரியதன்றென்பதை இவ்வடையினால் உணர வைத்தாள்.
பசப்பு - பசலை. ஏகாரம் அசை நிலை.
மேற்கோளாட்சி மு. தோழி தலைமகள் ஆற்றுவித்தது (தொல். களவு. 24, இளம்.); தோழி இயற்பட மொழிந்து தலைவியை வற்புறுத்தியது (தொல். களவு. 23. ந..)
ஒப்புமைப் பகுதி 1. பி-ம். தலைவன் அன்புடையன்: குறுந். 37:1, 213:1.
2. தலைவன் பழியஞ்சுதல்; குறுந். 252:8. பயமலை: மணி.17:50; பெருங்.2. 18:3. பயமலை நாடன்: கலி. 43:6.
3-4. உலகின் நிலையாமையும் புகழின் நிலைபேறும்: “நில்லா வுலகத்து நிலைமை” (பொருந. 176, பெரும்பாண். 466); “மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர், தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே” (புறநா.165:1-2); “மன்னா வுலகத்து மன்னிய சீர்த்தஞ்சைவாணன்” (தஞ்சை. 21.)
புகழின் நிலை பேறு: மலைபடு. 70, அடிக்.
7. அங்கலுழ் மேனி: “அங்கலி ழாகம்”, “அங்கலிழ் மேனி” (ஐங். 106:4, 174:4); “அங்கலுழ் மாமை” (அகநா. 41:15, 96:12); “அங்கலுழ் மேனியாய்” (சீவக. 1988.)
(143)
(தலைவி தலைவனுடன் போனாளாக, அவளைப் பிரிந்த செவிலித்தாய், “ஆயமகளிரோடு பிரிவின்றி விளையாடும் என் மகள் இப்பொழுது பாலைநிலத்திலே பரல் தன் அடிகளை வருத்தா நிற்க எம்மைப் பிரிந்து சென்றனள்” என்று கூறி வருந்தியது.) 144. | கழிய காவி குற்றுங் கடல |
| வெண்டலைப் புணரி யாடியு நன்றே |
| பிரிவி லாய முரியதொன் றயர |
| இவ்வழிப் படுதலு மொல்லா ளவ்வழிப் |
5 | பரல்பாழ் படுப்பச் சென்றனண் மாதோ |
| சென்மழை தவழுஞ் சென்னி |
| விண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டே. |
என்பது மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது.
மதுரை ஆசிரியன் கோடங்கொற்றன் (பி-ம். மதுரை நூலாசிரியன், மதுரைப்பாலாசிரியன்.)