பக்கம் எண் :


284


(தலைவன் தலைவியைப் பிரிந்து சென்ற இடத்துத் துயிலும் பொழுது அவளைக் கனாவிற் கண்டு பிரிவாற்றாமற் சொல்லியது.)
 147.   
வேனிற் பாதிரிக் கூன்மல ரன்ன 
    
மயிரேர் பொழுகிய வங்கலுழ் மாமை 
    
நுண்பூண் மடந்தையைத் தந்தோய் போல 
    
இன்றுயி லெடுப்புதி கனவே 
5
எள்ளா ரம்ம துணைப்பிரிந் தோரே. 

என்பது தலைமகன் பிரிந்தவிடத்துக் கனாக் கண்டு சொல்லியது.

     (தலைவன் பிரிவின்கண் கனாவிற் றலைவியைக் காண்டல்: தொல். பொருளியல், 3; ஐங். 324.)

கோப்பெருஞ் சோழன்

     (பி-ம்.) 2. ‘மயிரோவொழுகிய’, ‘மயிரொடு வொழுகிய’; 4. ‘லெழுப்புதி’.

     (ப-ரை.) கனவே-, வேனில் பாதிரி கூன் மலர் அன்ன - வேனிற்காலத்தில் மலரும் பாதிரியினது வளைந்த மலரினது துய்யைப் போன்ற, மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை - மயிர் எழுந்து படர்ந்த அழகு ஒழுகும் மாமையையும், நுண்பூண் - நுண்ணிய தொழிலையுடைய ஆபரணத்தையும் உடைய, மடந்தையை - தலைவியை, தந்தோய் போல - கொணர்ந்து கொடுத்தாயைப் போல, இன்துயில் எடுப்புதி - இனிய துயிலினின்றும் எழுப்பு கின்றாய், துணை பிரிந்தோர் - தம் துணைவியரைப் பிரிந்தோர், எள்ளார் - நின்னை இகழார்.

     (முடிபு) கனவே, இன்றுயில் எடுப்புதி; துணைப் பிரிந்தோர் எள்ளார்.

     (கருத்து) தலைவியைக் கொணர்ந்து காட்டிய கனவிற்கு யாது கைம்மாறு செய்வேன்!

     (வி-ரை.) பாதிரி வேனிற்பருவத்தே மலர்வதென்பது, ‘வேனிற்கட் பாதிரி’ (நன். 300, மயிலை.) எனவும், ‘வேனிற்கட்பூத்தது பாதிரி’ (நன். 301, சங்.) எனவும் காட்டப் பெற்ற உதாரணங்களால் விளங்கும். பாதிரியின் மலர் வளைந்திருப்பதாதலின் கூன் மலரென்றான்; “பைங்கூற் பாதிரிப் போது” (பெருங். 1. 42 : 204) என்பது காண்க. மலர்: ஆகுபெயர். பாதிரிமலரிலுள்ள துய் மயிரென்றும் வழங்கும்.; “பராரைப் பாதிரிக் குறுமயிர் மாமலர்” (நற். 337:4.) பாதிரிமலரின் துய் தலைவியின் வயிற்றினிடத்தேயுள்ள மயிரொழுங்கிற்கு உவமை; “எய்யா விளஞ்சூற் செய்யோ ளவ்வயிற், றைதுமயி ரொழுகிய தோற்றம்” (பொருந. 6-7) என்று வருணிக்கப்படுதல் காண்க. நுண்பூ ணென்றது, “நூலாக்கலிங்கம்” (பதிற். 12:21) என்பது போலப் பூணின் சினையாகிய சிற்பத்தின் அடை சினையோடு முதற்கு உள்ள ஒற்றுமை பற்றி முதல் மேலேற்றிக்