பக்கம் எண் :


286


(தலைவன் மீண்டு வருவதாகக் கூறிச் சென்ற கார்ப் பருவம் வரவும் அவன் வாராமையால் துன்பமுற்ற தலைவியை நோக்கித் தோழி, “இது பருவமன்று; அவர் பொய்யார்” என வற்புறுத்த, தலைவி, “கொன்றைமரங்கள் பூத்தன; இது கார்ப்பருவந்தான்” எனக் கூறியது.)
 148.   
செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த 
    
தவளை வாய பொலஞ்செய் கிண்கிணிக் 
    
காசி னன்ன போதீன் கொன்றை 
    
குருந்தோ டலம்வரும் பெருந்தண் காலையும் 
5
காரன் றென்றி யாயிற் 
    
கனவோ மற்றிது வினவுவல் யானே. 

என்பது பருவங் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி பருவமன்றென்று வற்புறுத்தத் தலைமகள் சொல்லியது.

இளங்கீரந்தையார்.

     (பி-ம்.) 1. ‘சீறாஅர்ச்’; 4. ‘குறுந்தோ’, ‘டலரும்’, ‘டலமரும்’; 5. ‘காரெனத் தேறாயாயின்’.

     (ப-ரை.) செல்வம் சிறாஅர் - செல்வத்தையுடைய சிறு பிள்ளைகளுடைய, சிறு அடி பொலிந்த - சிறிய அடியின்கண் விளங்கிய, தவளை வாய - தவளையின் வாயைப் போன்ற வாயையுடைய, பொலம் செய் கிண்கிணி காசின் அன்ன - பொன்னாற் செய்யப்பட்ட கிண்கிணிக் காசைப் போன்ற, போது ஈன்கொன்றை -பேரரும்பை வெளிப்படுத்தும் கொன்றை மரம், குருந்தோடு - குருந்த மரத்தோடு, அலம் வரும் - சுழலும், பெருதண் காலையும் - மிக்க தண்மையையுடைய பருவத்தையும், கார் அன்று என்றி ஆயின் - கார் காலமன்றென்று நீ கூறுவாயாயின், இது கனவோ - இங்ஙனம் தோற்றுவது கனவோ? யான் வினவுவல் - யான் கேட்பேன்; கூறுவாயாக.

     (முடிபு) கொன்றை அலம்வரும் காலையும் காரன்றென்றியாயின் கனவோ? யான் வினவுவல்.

     (கருத்து) தலைவர் இக்கார் காலத்தும் மீண்டும் வந்திலர்.

     (வி-ரை.) பொன்னாற் செய்யப்பட்ட கிண்கிணி யென்னும் ஆபரணத்தை யணியும் பொருள் மிகுதியை யுடையராதலின் ‘செல்வச் சிறாஅர்’ என்றாள். பொலிந்த கிண்கிணி, வாய கிண்கிணியென இயையும். கிண்கிணி பொன்னாற் செய்யப்படுதலின் ‘பொலஞ்செய் கிண்கிணி’ என்றாள். கிண்கிணி கொன்றைப் போதிற்கு உவமை; போது - மலரும்