வெள்ளி வீதியார் (பி-ம். வெள்ளி வீதி.) (பி-ம்.) 2.‘சனி நீடமர்ந்தன்று’,‘நனி நீட்டமர்ந்தன்று’; 3.‘சிறுசிறைத்’: 4.‘வீழ்ந்துக்’.
(ப-ரை.) தோழி---, நாண் - நாணம், நம்மொடு நனி வீடு உழந்தன்று - நம்மோடு மிக நெடுங்காலம் உடனிருந்து வருந்தியது; இனி - இனிமேல், வான்பூ கரும்பின் - வெள்ளிய பூவையுடைய கரும்பினது, ஓங்கு மணல் சிறு சிறை - உயர்ந்த மணலையுடைய சிறிய கரை, தீம்புனல் நெரிதர - இனிய நீர் நெருங்கி அடித்தலால், வீய்ந்து - அழிந்து, உக் காங்கு - வீழ்ந்தாற்போல, தாங்கும் அளவை தாங்கி - தடுக்கும் வரையில் தடுத்து, காமம் நெரிதர - காமம் மேன்மேலும் நெருக்க, கை நில்லாது - என்பால் நில்லாது, போய்விடும்; அளிது - அஃது இரங்கத் தக்கது.
(முடிபு) நாண் நனி நீடுழந்தன்று; கைந்நில்லாது; அளிது.
(கருத்து) யான் தலைவனுடன் செல்லுதலால் நாணழியும்.
(வி-ரை.) அளிது - இரங்கத்தக்கது; “அளிதோ தானே பாரியது பறம்பே”
(புறநா. 109:1.) நாண் நீடுழந்தன் றென்றது, தலைவியோடு உடன் வளர்ந்து அணியாய் நின்று பிரியாதிருந்தமை பற்றி’ ‘நாணென்பது பெண்டிர்க்கு இயல்பாகவே உளதொரு தன்மை’
(இறை. 2, உரை.) மன்கழிவுப் பொருளை உணர்த்திற்று. கரும்பின் பூ வெண்மையுடையதாதலின் ‘வான் பூ’ என்றாள்; ‘ஆடுகட் கரும்பின் வெண்பூ”
(புறநா. 35:10.) நாணத்திற்குச் சிறு சிறையும் காமத்திற்குப் புனலும் உவமை; “சிறையு முண்டோ செம்புனன் மிக்குழீஇ, நிறையு முண்டோ காமங் காழ்க்கொளின்”
(மணி. 5:19-20); “சிறையென்ப தில்லைச் செவ்வே செம்புனல் பெருகு மாயின், நிறையென்ப தில்லைக் காம நேர்நின்று சிறக்கு மாயின்”
(சூளா. கல்யாணச். 155) எனப் பிறரும் உவமை கூறுதல் காண்க. இதுவரை தம்முள் ஒத்த அளவினவாக இருந்த காமம் நாண் என்னும் இரண்டனுள் நாணத்தைக் காமம் வென்றதென்பது கருத்து. நில்லாதே: ஏகாரம் அசை நிலை.