கிளி மங்கலங் கிழார் (பி-ம். கிழிமங்கலங்கிழார், கழிமங்கலங்கிழார், கிள்ளிமங்கலங்கிழார்.) (ப-ரை.) யாமை பார்ப்பின் அன்ன காமம் - தாய்முகம் நோக்கி வளருந் தன்மையையுடைய ஆமையின் பார்ப்பைப் போலத் தலைவரைப் பல்காற் காண்டலால் வளருந்தன்மையையுடைய காமமானது, காதலர் கையற விடின் - அவர் நாம் செயலறும்படி நம்மைப் பிரிந்து கைவிட்டால், தாய் இல் முட்டை போல - தாயில்லாத முட்டை கிடந்தபடியே அழிவது போல, உள் கிடந்து சாயின் அல்லது - உள்ளத் துள்ளே கிடந்து மெலியினன்றி, பிறிது எவன் உடைத்து - வேறு என்ன உறுதியை உடையது? கழறுவோர் - என்னை இடித்துரைப்போர், யாவதும் - இதனைச் சிறிதேனும், அறிகிலர் - அறிந்திலர்.
(முடிபு) காமம், காதலர் விடின், சாயினல்லது பிறிதெவனுடைத்து? கழறுவோர் யாவதும் அறிகிலர்.