(கருத்து) தலைவர் விரைவில் வரைகிலரேல் காமம் பயனற்றுக் கெடும்.
(வி-ரை.) விரைவில் வரைந்து கொள்ளுதற்குரிய முயற்சியைத் தலைவன் செய்யும்படி அவனைத் தூண்டாமல் தன்னைக் கடிந்த அயன்மை பற்றித் தோழியை வேறுபடுத்திப் படர்க்கையாற் கூறினாள்; முன்னிலைக் கண் உள்ள தோழிக்குப் படர்க்கையாற் குறிப்பாக உணர்த்தினமையின் இது முன்னிலைப் புறமொழி.
கழறுதல் - இடித்துரைத்தல்.
தாயில்லாத முட்டை அத்தாயால் இடப்பட்டும் அடுத்தடுத்துப் பாதுகாத்தலை யொழிந்தமையின் குஞ்சாகும் பயனைப் பெறாதது போல, தலைவனால் உண்டான காமம் அவன் வரைந்து கொண்டு இடையீடின்றி உடனுறையும் நிலை பெறாமையின் இல்லறப் பயனைப் பெறாதென உவமையை விரித்துக் கொள்க. உட்கிடந்து சாய்தலை உவமைக்குங் கூட்டிக் கருவானது வெளிவராமல் முட்டைக்குள்ளே கிடந்து அழிதலையுங் கொள்க.
| “தீம்பெரும் பொய்கை யாமை யிளம்பார்ப்புத் |
| தாய்முக நோக்கி வளர்ந்திசி னாஅங் |
| கதுவே யையநின் மார்பே் |
| அறிந்தனை யொழுகுமதி யறனுமா ரதுவே” (ஐங். 44) |
என்புழியும் யாமைப் பார்ப்பைக் காமத்துக்கு உவமை கூறியிருத்தல் காண்க. பார்ப்பின் அன்ன: இன், வேண்டாவழிச் சாரியை.
மேற்கோளாட்சி4-5.பார்ப்பென்னும் இளமைப் பெயர் தவழ்வனவற்றிற்கும் உரியது (தொல். மரபு. 26, இளம், 5, பேர்.)
மு. தலைவி முன்னிலைப் புறமொழி மொழிந்தது (இ.வி. 513.)
ஒப்புமைப் பகுதி 1. கழறுவோர் காமத்தின் தன்மையை அறியார்: குறுந். 260: 1-2.
4. யாமைப் பார்ப்பு: அகநா. 160: 5-7.
(152)
(தலைவன் வரையாமல் நெடுங்காலம் வந்து அளவளாவுதலால் வருந்திய தலைவி தோழியை நோக்கி, “இனி அவரை வாரற்கவென்று கூறுவாயாக” என, தோழி தலைவியை, “அங்ஙனம் கூறுதற்குக் காரணம் யாது?” என வினவ, “அவர் வரும் வழியின் ஏதமறிந்து எனக்கு ஆற்றாமை உண்டாகின்றது” என்று தலைவி கூறியது.) 153. | குன்றக் கூகை குழறினு முன்றிற் |
| பலவி னிருஞ்சினைக் கலைபாய்ந் துகளினும் |
| அஞ்சும னளித்தெ னெஞ்ச மினியே |
| ஆரிருட் கங்கு லவர்வயிற் |
5 | சார னீளிடைச் செலவா னாதே. |
என்பது வரையாது நெடுங்காலம் வந்தொழுகுகின்றுழி, “நாம் அவரை வேறுபடுத்தற்குக் காரணம் என்னை? ‘‘என்ற தோழிக்கு, “அவர் வரவு நமக்கு ஆற்றாமைக்குக் காரணமாம்” எனத் தலைமகள் கூறியது.