பக்கம் எண் :


300


     4-7. தலைவன் மணியொலிக்கத் தேரில் வருதல்: (குறுந். 336: 3-4); "காமம் பெருமையின் வந்த ஞான்றை........ ........ ........ ........ தேர்மணித் தெள்ளிசை கொல்லென" (நற்.287:7-10); "தாதுண் பறவை பேதுற லஞ்சி, மணிநா வார்த்த மாண்வினைத் தேரன், உவக்காண் டோன்றுங் குறும்பொறை நாடன்’ (அகநா.4:11-3.)

     3-7.பொழுது வந்தது, தலைவர் வந்திலர்: ஐங்..341-50.

(155)
  
(தலைவியின்பால் விருப்புற்ற தன்னைப் பாங்கன் இடித்துரைத்த போது தலைவன் பாங்கனை நோக்கி, "நீ இடித்துரைத்தலால் பயனொன்று மில்லை" என்று கூறியது.)
 156.   
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே 
    
செம்பூ முருக்கி னன்னார் களைந்து 
    
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்  
    
படிவ வுண்டிப் பார்ப்பன மகனே 
5
எழுதாக் கற்பி னின்சொ லுள்ளும் 
    
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் 
    
மருந்து முண்டோ மயலோ விதுவே. 

என்பது கழறிய பாங்கற்குக் கிழவன் அழிந்து கூறியது.

பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன்.

     (பி-ம்.) 3. ‘தாழ்மண்டிலத்துப்’; 4. ‘படிம’; 5. ‘னின்செயலுள்ளும்’.

     (ப-ரை.) பார்ப்பன மகனே பார்ப்பன மகனே---, செ பூ முருக்கின் - செம்மையாகிய பூவையுடைய புரச மரத்தினது, நல் நார் களைந்து - நல்ல பட்டையை நீக்கி விட்டு, தண்டொடு பிடித்த - அதன் தண்டோடு ஏந்திய, தாழ் கமண்டலத்து - தாழ்கின்ற கரகத்தையும், படிவம் உண்டி - விரதவுணவையுமுடைய, பார்ப்பன மகனே-, எழுதா கற்பின் - வேதத்தையறிந்த, நின் சொல்லுள்ளும் - நின்னுடைய அறிவுரைகளுள், பிரிந்தோர் புணர்க்கும் - பிரிந்த தலைவியரையும் தலைவர்களையும் சேரச் செய்யும், பண்பின் - தன்மையையுடைய, மருந்தும் உண்டோ - பரிகாரமும் இருக்கின்றதோ? இது - இங்ஙனம் நீ கழறுதல், மயல் - மயக்கத்தால் வந்ததாகும்.

     (முடிபு) பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே, நின் சொல்லுள்ளும் மருந்துமுண்டோ? இது மயல்.

     (கருத்து) நீ என்னை இடித்துரைத்தலால் வரும் பயன் யாதும் இல்லை.

     (வி-ரை.) இது பார்ப்பனப் பாங்கன் காமநிலை யுரைத்துத் தேர்நிலை யுரைத்த போது (தொல். கற்பு. 36) தலைவன் கூறியது. முருக்கென்றது