ஒப்புமைப் பகுதி 1. செந்தலையன்றில்: “சேவ லோடுறை செந்தலையன்றிலின், நாவி னால்வலி யெஞ்ச நடுங்குவாள்” (கம்ப. சூர்ப்ப. 76.)
நெருப்பின் அன்ன செந்தலையன்றில்: “எரியகைந் தன்ன செந்தலை யன்றில்” (தொல். களவு. 21, ந. மேற்.)
1-2. அன்றிலின் கொடுவாய்: “ஏங்குவயி ரிசைய கொடுவாயன்றில்” (குறிஞ்சிப். 219); “கொடுவாய்ப் புணரன்றில்” (கைந்நிலை. 57)
4. நள்ளென்யாமம்: குறுந். 6:1, ஒப்பு; நெடுநல். 186; நற். 22:11, 145:10, 178:8, 199:3, 287:9, 333:12; ஐங். 324:3; அகநா. 103:12, 129:2, 142:20, 170:12, 279:6.
1-4. அன்றில் யாமத்து நரலுதல்: (குறுந். 177: 1-4, 301:1-4); “பெடைபுண ரன்றி லியங்குகுர லளைஇக், கங்குலுங் கையறவு தந்தன்று”, “இன்னும், தமியேன் கேட்குவென் கொல்லோ, பரியரைப் பெண்ணை யன்றிற் குரலே”, “ஒலியவிந் தடங்கி யாம நள்ளென... மன்றப் பெண்ணை வாங்குமடற் குடம்பைத், துணைபுண ரன்றி லுயவுக் குரல் கேட்டொறும், துஞ்சாக் கண்ண டுயரடச் சாஅய், நம்வயின் வருந்து நன்னுத லென்ப”, “மையிரும் பனைமிசைப் பைதல வுயவும், அன்றிலுமென்புற நரலும்” (நற். 152: 7-8, 218:9-11, 303:1-7, 335:7-8); “கழுதுகண் படுக்கும் பானாட் கங்குல், எம்மினு முயவுதி செந்தலை யன்றில்” (தொல். களவு. 16, ந. மேற். “இருள்வீ”.)
5. பெருந்தண்வாடை:குறுந். 35:5, ஒப்பு.
(160)
(தாய் உறங்காமல் விழித்திருந்தமையால் தலைவன் இரவில் வந்தும் அவனைக் காணுதற்கு இயலாத தலைவி மறுநாள் அவன் வந்து மறைவில் நிற்பதை யறிந்து, “நேற்று அன்னை விழித்திருந்தாள். தலைவன் வந்தா னென்பதை யான் உணர்ந்தும் பயனிலதாயிற்று” என்று தோழியை நோக்கிக் கூறியது.) 161. | பொழுது மெல்லின்று பெயலு மோவாது |
| கழுதுகண் பனிப்ப வீசு மதன்றலைப் |
| புலிப்பற் றாலிப் புதல்வற் புல்லி |
| அன்னா வென்னு மன்னையு மன்னோ |
5 | என்மலைந் தனன்கொ றானே தன்மலை |
| ஆர நாறு மார்பினன் |
| மாரி யானையின் வந்துநின் றனனே.் |
என்பது இரவுக்குறிக்கண் வந்த தலைமகனைக் காப்பு மிகுதியான் எதிர்ப்படப் பெறாத தலைமகள், பிற்றைஞான்று தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
நக்கீரர். (பி-ம்) 2.‘வீசுந் தன்றலை’;3. ‘புதல்வர்ப்’;4. ‘அன்னாயென்னும்’;7. ‘நின்றோனே’.