(மேற்கோளாட்சி) 1-4. தலைவியிடத்துக் காதல் கையிகந்து பெருகுதலால் துயிலா நின்றுழியும் ஒன்று கூறிச் செவிலி அரற்றியது இது; ‘பொழுது மெல்லின் றென்பதனுள் புதல்வற்புல்லி அன்னாயென்று தலைவியை விளித்தது கனவின் அரற்ற லாயிற்று’ (தொல். களவு. 24, ந.)
7.உவமையில் திணை மயங்கி வந்தது (தொல். உவம.6, பேர்.)
5-7.. துஞ்சிச் சேர்தல் என்னும் மெய்ப்பாடு வந்தது;‘என்ன காரியம் மேற்கொண்டு வந்தானென்றமையின் இது துஞ்சிச் சேர்தலாயிற்று; அல்லாக்கால் அங்ஙனஞ் சொல்லுதல் அன்பழிவெனப்படும்’ (தொல். மெய்ப். 23, பேர்; இ.வி.580.)
மு. காப்பு மிகுதிக்கண் மனையகப்பட்டுக் கலங்கி உணர்வு அழிந்த வழித் தலைவி ஆராய்ச்சி யுடையதாகிய அருமறையினைத் தோழிக்குக் கூறியது (தொல். களவு. 21, இளம், 20, ந.)
ஒப்புமைப் பகுதி 1. பொழுதும் எல்லின்று; “எல்லின்று பொழுதே”(நற். 264:6, அகநா.224:1) “எல்லு மெல்லின்று” (குறுந். 179:2, 390:1); அகநா. 110;11, 370:2,
3. புலிப்பற்றாலி: “புலிப்பற் கோத்த புலம்புமணித் தாலி” (அகநா. 7:18); “புலிப்பற் றாலிப் புன்றலைச் சிறாஅர்” (புறநா. 374:9); “மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற, மாலை வெண்பற் றாலி” (சிலப். 12: 27-8); “போதிற் பொலியுந் தொழிற்புலிப் பற்குரற் பொற்றொடியே” (திருச்சிற். 239.)
6. ஆரம் நாறும் மார்பினன்: குறுந். 198:7, 321:1, கலி. 52:7,15. 5-6. நற். 344:5-7.
7. யானை தலைவனுக்கு: குறுந். 244:2; அகநா. 308:15.
மாரியானை: நற். 141:2
(161)
(தலைவியைப் பிரிந்த தலைமகன் தான் மேற்கொண்ட செயல் முடித்து மீளும்பொழுது வழியில் அரும்பியிருந்த முல்லையைப் பார்த்து, ‘நீ தனித்திருப்போரை நோக்கி அரும்பால் எள்ளி நகையாடல் தகுமோ?” என்று கூறியது.) 162. | கார்புறந் தந்த நீருடை வியன்புலத்துப் |
| பலர்புகு தரூஉம் புல்லென் மாலை |
| முல்லை வாழியோ முல்லை நீநின் |
| சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை |
5 | நகுவை போலக் காட்டல் |
| தகுமோ மற்றிது தமியோர் மாட்டே. |
என்பது வினைமுற்றி மீளும் தலைமகன் முல்லைக்குரைப்பானாய் உரைத்தது.