அம்மூவன். (பி-ம்) 1.‘கடலே யூழி’;4.‘தாழைத்திரை’.
(ப-ரை.) கடலே---, பூழியர் - பூழி நாட்டாரது, சிறு தலை - சிறிய தலையையுடைய, வெள்ளை தோடு பரந்தன்ன - வெள்ளாட்டின் தொகுதி பரவினாற்போன்ற, மீன் ஆர் குருகின் - மீனை உண்ணும் கொக்குகளையுடைய, கானல் பெரு துறை - சோலை சூழ்ந்த பெரிய துறையினிடத்து, வெள் வீ தாழை - வெள்ளிய பூவையுடைய தாழையை, திரை அலை - அலைகள் அலைக்கின்ற, நள்ளென்கங்குலும் - நடு இரவிலும், நின் குரல் கேட்கும் - நினது ஆரவாரம் செவிப்படும்; யார் அணங்கு உற்றனை - நீ யாரால் வருத்த மடைந்தாய்?
(முடிபு) கடலே, கங்குலும் நின்குரல் கேட்கும்; யார் அணங்குற்றனை?
(கருத்து) கடலே, நீ யார் பிரிவுபற்றி வருந்துகின்றாய்?
(வி-ரை.) தலைவனைப் பிரிந்த காம மயக்கத்தால் கடலைப் பார்த்துத் தலைவி கூறியது இது. நள்ளென் கங்குலிலும் துயிலாமல் அரற்றும் நிலையையுடைய அவள் கடலையும் தன்னைப் போன்றதெனக் கருதி,“யான் ஒரு தலைவனால் அணங்குற்றது போல நீயும் ஒரு தலைவனால் அணங்குற்றனைபோலும்! அத்தலைவன் யார்?” என்று வினவினாள்.
பூழி நாட்டினர் ஆட்டு நிரையுடையரென்ற செய்தி, “பூழியர், உருவத் துருவி னாண்மேய லாரும்” (நற். 192:3-4) என்றவிடத்தும் காணப்படுகின்றது. வெள்ளை - வெள்ளாடு (மலைபடு. 414, ந.) கானலம் பெருந்துறை: அம் சாரியை. கானல் - கடற்கரைச் சோலை. வெள்வீத் தாழை யென்றாள் செந்தாழையும் உண்மையின்.
நள்ளென் கங்குலில் நின்குரல் கேட்குமென்றமையால் அதனைக் கேட்பாளாகிய தலைவியும் அந்நள்ளிரவில் துஞ்சாமை பெறப்படும்.