பக்கம் எண் :


315


அறியாமை. புலத்தல்: ‘இவள் என் கொழுநனை வலிதின் நயப்பித்துக் கொண்டு புறம்போகாவாறு செய்தனள்’ என்று பழி கூறி வெறுத்தல்.

    ஆயினமெனினென்றது ஆகாமையை உணர்த்தி நின்றது.

    ‘வாளைநாகு தான் இருந்தவிடத்தே யிருந்து முயற்சி சிறிதுமின்றி எளிதில் கொக்கின் பழத்தைப் பெற்றதுபோல, யாம் முயலாமே தலைவன் வலிய வந்து எம்மை நயப்ப யாம் அவனோடு உறைந்தேம்; ஆதலின் யாம் குறை கூறற்குரியேமல்லேம்’ என்று காதற்பரத்தை கூறினாள்.

    (மேற்கோளாட்சி) 1. நாகென்பது இளமைக்கு வரும் (தொல்.மரபு. 26, பேர்.)

    ஒப்புமைப் பகுதி. கணைக்கோட்டு வாளை: நற். 340:4; அகநா. 126:8; புறநா. 249:2. 2. தேக்கொக்கு: குறுந். 26:6, ஒப்பு. 1-2. வாளை மாம் பழத்தை உண்ணுதல்: குறுந். 8:1-2, ஒப்பு. தொன்றுமுதிர் வேளிர் குன்றூர்: நற். 280:8.

(164)
  
(தோழியினிடம் இரந்து நின்றும் உடம்பாடு பெறாத தலைவன் தலைவிபாற் சென்ற தன் நெஞ்சை நோக்கி, “ஒருமுறை விரும்பி அறிவிழந்தாய்; மீண்டும் விழைகின்றாய்!” என்று கூறியது.)
 165.    
மகிழ்ந்ததன் றலையு நறவுண் டாங்கு 
     
விழைந்ததன் றலையு நீவெய் துற்றனை 
     
அருங்கரை நின்ற வுப்பொய் சகடம் 
     
பெரும்பெய றலையவீந் தாங்கிவள் 
5
இரும்பல் கூந்த லியலணி கண்டே. 

என்பது பின்னின்ற தலைமகன், மறுக்கப்பட்டுப் பெயர்த்துங் கூடலுறு (பி-ம். பெயர்ந்ததுங் கூடலு) நெஞ்சிற்குச் சொல்லியது.

    (பின்னிற்றல் - வழிபடுதல்.)

பரணர்.

    (பி-ம்) 2.‘விழைத்ததன்’; 4.‘பெரும்புயற்றலை’, ‘பெரும்பெயற் றலையவிந் தாங்’, ‘றலையவீஇந் தாங்’.

    (ப-ரை.) நெஞ்சே, அரு கரை நின்ற - ஏறுதற்கரிய கரையில் நின்ற, உப்பு ஒய் சகடம் - உப்பைச் செலுத்துகின்ற வண்டி, பெருபெயல் தலைய - பெரிய மழை பொழிந்ததனால், வீந்தாங்கு - அழிந்ததுபோல, இவள் இரு பல் கூந்தல் - இவளது கரிய பலவாகிய கூந்தலின், இயல் அணி கண்டு - இயற்கை அழகைக் கண்டு, மறுக்கப்பட்டோமென்று அன்பு ஒழியாயாய்க் காமத்தால் நாண் அழிந்து, மகிழ்ந்ததன் தலையும் - கள்ளுண்டு அறிவிழந்து களித்ததன் மேலும், நற உண்டாங்கு - கள்ளை உண்டாற்போல், நீ-, விழைந்த