பக்கம் எண் :


333


(தலைவனைத் தலைவி ஏற்றுக் கொள்ள வேண்டுமென்னுங்கருத்தினால், “பல நாள் இங்கே வந்து பணிந்த சொற்களைக் கூறிச்சென்றதலைவன் இப்பொழுது எங்கே இருக்கின்றானோ? அவனை நினைந்து என் நெஞ்சம் கலங்குகின்றது” என்று அவளுக்கு இரக்கம் உண்டாகும்படிதோழி கூறியது.)
 176.   
ஒருநாள் வாரல னிருநாள் வாரலன்  
    
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றியென்  
    
நன்னர் நெஞ்ச நெகிழ்த்த பின்றை 
    
வரைமுதிர் தேனிற் போகி யோனே 
5
ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ 
    
வேறுபுல னன்னாட்டுப் பெய்த 
    
ஏறுடை மழையிற் கலிழுமென் னெஞ்சே. 

என்பது தோழி, கிழத்தியைக் குறைநயப்பக் கூறியது.

    (குறை நயப்ப - தலைவனது காரியத்தை விரும்பி நிறை வேற்றுதற்கு.)

வருமுலையாரித்தி.

    (பி-ம்) 2.‘பனிமொழி’; 3.‘நெகிழ்ந்த’; 6.‘வேறுபுனல்’. ‘புலநன்னாட்டுப்’. புலநாட்டுப்; 7.கலுழும்.

    (ப-ரை.) ஒருநாள் வாரலன் - ஒருநாள் வந்தானல்லன்;இருநாள் வாரலன் - இரண்டு நாட்கள் வந்தானல்லன்; பலநாள் வந்து - பல நாட்கள் வந்து, பணிமொழி பயிற்றி - பணிவைப் புலப்படுத்தும் மொழிகளைப் பல்காற் கூறி, என்நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை - எனது நன்மையையுடைய நெஞ்சத்தை இரங்கச் செய்தபிறகு, வரை முதிர்தேனின் போகியோன் - மலையினிடத்தில் முதிர்ந்து வீழ்ந்ததேனிறாலைப் போலப் போயினவனும், ஆசு ஆகு எந்தை - நமக்குப் பற்றுக் கோடாகிய எந்தையுமாகிய தலைவன்,யாண்டு உளன் கொல் - எங்கே இருக்கின்றானோ? வேறுபுலன் நல்நாட்டு பெய்த - வேற்றுப் புலங்களையுடையநல்ல நாட்டிற்பெய்த, ஏறுடை மழையின் - இடியேற்றையுடைய மழைநீர் கலங்கி வருவது போல, என் நெஞ்சு -,கலிழும் - கலங்கும்.

    (முடிபு) போகியோன், எந்தை, யாண்டுளன் கொல்? என் நெஞ்சு கலிழும்.