கபிலர் (பி-ம்.) 1. ‘வேலிக் கோடல்பலவின்’.
(ப-ரை.) வேரல் வேலி - சிறு மூங்கிலாகிய வாழ் வேலியை உடைய, வேர் கோள் பலவின் சாரல் நாட - வேரிலே பழக்குலைகளை உடைய பலா மரங்கள் செறிந்த பக்கத்தை உடைய மலை நாடனே, சாரல் - பக்க மலையில், சிறுகோடு - பலாமரத்தின் சிறிய கொம்பில், பெரும் பழம் தூங்கியாங்கு - பெரிய பழம் தொங்கியது போல, இவள் - இத்தலைவியினது, உயிர் தவ சிறிது - உயிரானது மிகச் சிறுமையை உடையது; காமம் தவ பெரிது - காமநோய் மிகப் பெரிது; அஃது - அந்நிலையை, அறிந்திசினோர் யார் - அறிந்தவர் யார்? ஒருவரும் இல்லை; செவ்வியை ஆகுமதி - அவளை வரைந்து கொள்ளும் பருவத்தை உடையை ஆகுக.
(முடிபு) நாட, இவள் உயிர் தவச் சிறிது; காமம் தவப் பெரிது; அஃது அறிந்திசினோர் யார்? செவ்வியை ஆகுமதி.
(கருத்து) தலைவியை நீ விரைவில் மணம் புரிந்து கொள்ள வேண்டும்.
(வி-ரை.) வேரல் - சிறு மூங்கில் (குறிஞ்சிப். 71,ந.) மலைச் சாரலில் இயல்பாக வளர்ந்த மூங்கிலே பலா மரத்திற்கு வேலியாயிற்று; இத்தகைய வேலியை வாழ்வேலி என்பர் (பெரும்பாண். 126,ந.) வேர்கோட் பலவு - வேர்ப்பலா; இது பலா மரத்துள் ஒரு சாதி. செவ்வி - தலைவியை வரைந்து கொள்ளும் நிலை. தலைமகனுக்கு உவப்பில்லாத வரைவைப் பற்றிக் கூறப் புகுகின்றாளாதலின் அதற்குப் பாதுகாப்பாக முதலில், ‘நீ செவ்விய நலத்தை உடையை ஆகுக’ என்று வாழ்த்தியதுமாம். தன்னினும் மிக்கார்க்கு இன்னாதனவற்றைக் கூறுவதற்கு முன் வாழ்த்துதல் மரபு;