(ப-ரை.) தோழி, முல்லை முகை முற்றின - முல்லைக்கொடிகளில் அரும்பு முதிர்ந்தன; தண் கார் வியல் புனம்முல்லையொடு தகைமுற்றின - தண்ணிய கார்காலத்தைஏற்ற அகன்ற முல்லை நிலங்கள் முல்லை மலர்களோடுஅழகு முதிர்ந்தன; என் மாண் நலம் குறித்து - எனதுமாட்சிமைப் பட்ட அழகைக் கெடுத்தலை எண்ணி, மாலைவந்தன்று - மாலைக் காலம் வந்தது; வால் இழை நெகிழ்த்தோர்வாரார் - என்னைப் பிரிந்து என் தூய ஆபரணங்களைநெகிழச் செய்த தலைவர் இன்னும் வந்தாரல்லர்.
(முடிபு) முல்லை முகை முற்றின; புனம் தகை முற்றின; மாலைவந்தன்று; இழை நெகிழ்த்தோர் வாரார்.
(கருத்து) கார்காலம் வந்த பின்பும் தலைவர் வந்திலர்.
(வி-ரை.) தகை - தகுதி; முல்லைத் திணையென்னும் தகுதியைமுல்லை மலர்களால் பெற்றதென்றலுமாம். தலைவன் பிரிவினால்தலைவியின் உடல் மெலிந்தது. அதனால் இழைகள் நெகிழ்ந்தன. தன்மெலிவினால் இழைகள் நெகிழ்ந்தனவேயன்றி அவை குற்றமுடையனவல்ல வென்பாள் ‘வாலிழை’ என்று சிறப்பித்தாள். ‘கார்காலத்தைக்கண்டு வருந்தினேன்; அக் கார்ப் பருவத்திலும் காமம் மலர்வதற்குரிய மாலையைக் கண்டு பின்னும் வருந்தினேன்’ என்பாள் அவற்றை அடையவே கூறினாள். வந்தன்று - வந்தது. நலங்குறித்து வந்ததென்று நலத்தையழித்தல் குறித்து வந்த தென்றவாறு; “பகைவர்ச் சுட்டிய படைகொ ணோன்விரல்” (முல்லைப். 77) என்பது போல.
ஒப்புமைப் பகுதி 1. முல்லை கார்காலத்தில் அரும்புதல் : குறுந். 126: 3-5.ஒப்பு.
1-2. முல்லை, கார், புனம் : குறுந். 186: 1-2.