அதனைச் சுமந்ததென்று மாலையைக் கூறியது இலக்கணை. கொல்:ஐயம். ஓ: அசைநிலை; இரங்கற் குறிப்புமாம். அசைவளி - மெலிந்தகாற்று; மெல்லென்ற காற்றெனலுமாம்; என்பதனால் கூதிர்ப்பருவம்குறிக்கப்பட்டது.
தாம் பிரியுங் காலத்தில் பாவையன்னதாக விருந்த என் மேனியையேயறிந்தவர், இப்பொழுது அழகு கெட்டமையை உணராரென்றாள்;உணர்வரேல் மீள்வரென்பது தலைவியின் நினைவு. பாவையன்னவென்மேனி யென்றது கழிந்ததற்கிரங்கியதாதலின் தற்புகழ்ச்சி யாகாது;பட்டாங்கு கூறியதுமாம். ஏகாரம் ஈற்சை. செய்வு - செய்தல் (கலி.7:7, ந.) பாவை - பொன்னாற் செய்த பாவை; “செந்நீர்ப் பசும்பொன்புனைந்த பாவை, செல்சுடர்ப் பசுவெயிற் றோன்றி யன்ன, செய்யர்”(மதுரைக். 410-12) எனவும்,”தாவி னன்பொன்றைஇய பாவை, விண்டவழிளவெயிற் கொண்டுநின் றன்ன, மிகுகவின்” (அகநா. 212:1-3) எனவும்வருவனவற்றைக் காண்க.
மேற்கோளாட்சி2. பையுளென்னும் உரிச்சொல் நோயென்னும் குறிப்புணர்த்தியது (தொல். உரி. 45, சே, தெய்வச்.)
ஒப்புமைப் பகுதி 1. சுடர் சினந்தணிதல் : “கதிர்சினந் தணிந்த கையறுமாலை” (குறுந். 387:2.)
சுடரின் சினம் : கலி. 16:11; புறநா. 59:5-6.
சுடர் குன்றம் சேர்தல்: சிறுபாண்.170-71; மதுரைக். 546-7;குறிஞ்சிப். 215-6; கலி. 119:1-2, 120:3, 121:1, 126:1, 148:3; அகநா. 47:9.
மு. நற். 369:1.
2. படர்சுமந் தெழுதரு மாலை: “படருறு மாலை” (சிலப்.8:68.)
பையுண் மாலை:குறுந். 46:6.
5. அசைவளி : குறுந்.28:4, ஒப்பு.
6. தலைவிக்குப் பாவை: நற். 319:7-8; அகநா. 98:12.
செய்வுறு பாவை: புறநா. 243:2.
(195)
(ஊடியிருந்த தலைவியின் உடம்பாடு பெறுவதற்குத்துணை புரியும்வண்ணம் தலைவன் தோழியை வேண்டியபொழுது, “நீர் முன்பு எம்தலைவிபால் அன்புடையராயினீர்; இப்பொழுது அதனை நீங்கினீர்;ஆதலின் நும்மை ஏற்றுக் கொள்ளுமாறு எங்ஙனம்?” என்பது பட அவள்கூறியது.) 196. | வேம்பின் பைங்காயென் றோழி தரினே |
| தேம்பூங் கட்டி யென்றனி ரினியே |
| பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர் |
| தைஇத் திங்கட் டண்ணிய தரினும் |
5 | வெய்ய வுவர்க்கு மென்றனிர் |
| ஐய வற்றா லன்பின் பாலே. |
என்பது வாயில் வேண்டிப் புக்க கிழவற்குத் தோழி கூறியது.