ரென்றபடி. மலையிடையிட்ட நாட்டினராயின் நினைத்தபோது காண்டற்குஅரிய நிலையினராவர்; வேற்றூராராயின் எப்பொழுதும் காணும்நிலையிலதாகும். கண்ணிற் காண நண்ணுவழி - கண்ணாலே காணுதற்குரிய அணிமை; என்றது கற்பொழுக்கத்திற்றலைப்பட்டு எப்பொழுதும் உடனுறையும் நிலையைக் குறித்தது.
மரந்தலை - மரம்; தலை: அசைநிலை; ‘கயந்தலை’ போல; “மரந்தலை கரிந்து” (அகநா. 169:1.)
முனிவரைக் கண்டார் தம் தூய்மையன்மை காரணமாக அஞ்சி விலகி யொழுகும் தன்மையைப் போல என்னிடத்தினின்றும் நீங்கி ஒழுகினா ரென்றாள். இவ்வுவமையால், தனது தூய்மையையும் தலைவனது பரத்தை மையாகிய தூய்மையன்மையையும் குறிப்பாலுணர்த்தினாள். கடவுள் - முனிவர் (மதுரைக். 41, ந.)
அவர் இங்ஙனம் ஒழுகினும் என்பால் உரிமையுடையாரென்னும்கருத்துப் பற்றி என்னையென்றாள். பண்டென்றது களவுக்காலத்தைச்சுட்டியபடி.
களவுக் காலத்து மலையிடையிட்டும் காடிடையிட்டும் உள்ள இடத்தி லிருந்து வருந்திவந்து என்னோடு இன்புற்ற அவர், இப்பொழுது என்றும் உடனுறைவதற்கேற்ற நிலையைப் பெற்றும் ஒருவி யொழுகினா ரென்றாள்.
பண்டொருகால் பரிவையுடையேனென்றது, இப்பொழுது அதனைஒழிந்தேனென்னும் பொருள் பயந்து வாயில்மறுத்ததாயிற்று.
வாயில் வேண்டிய தோழி, “நீ முன்பு அவர்பால் மிக்க அன்புடையை யாக இருந்தாயன்றே! ஆதலின் உடம்படுக” என்று கூறினாளாதலின், “அவரும் தம் பண்டை நிலையிற் பிறழ்ந்தார்; யானும் பரிவு நீங்கினேன்” என மறுத்தாள்.
மன்: கழிவிரக்கப் பொருளில் வந்தது.
மேற்கோளாட்சி 5. தலைமகள் தலைவனை என்னை யென்றது (தொல்.பொருள். 50, இளம்.) 5-6. மேற்படி (தொல். பொருள். 52, ந.)
ஒப்புமைப் பகுதி 3. மு. பொருந. 76. மு. குறுந். 231.
(203)
(தலைவனைப் பாங்கன் இடித்துரைத்தது.) 204. | காமங் காம மென்ப காமம் |
| அணங்கும் பிணியு மன்றே நினைப்பின் |
| முதைச்சுவற் கலித்த முற்றா விளம்புல் |
| மூதா தைவந் தாங்கு |
5 | விருந்தே காமம் பெருந்தோ ளோயே. |
என்பது தலைமகற்குப் பாங்கன் உரைத்தது.