ஐயூர் முடவன். (பி-ம்.) 1. ‘அமிர்தத்’; 2. ‘குன்றுமின்ன’; 5. ‘அறிவுடையோரே’.
(ப-ரை.) அறிவுடையீரே - அறிவையுடையவரே, அமிழ்தத்து அன்ன - அமிழ்தத்தைப்போன்ற, அம் தீம் கிளவி - அழகிய இனிய சொற்களையுடைய, அன்ன இனியோள் - மனத்தாலுணர்தல் மாத்திரையே யியன்ற அத்தகையஇனிமையையுடையோளது, குணனும் - குணமும், இன்ன - இத்தகைய, இன்னா அரு படர் செய்யுமாயின் - இன்னாதனவாகிய துன்பங்களை உண்டாக்குமாயின், காமம் - காமமானது, உடன் உறைவு அரிது - ஒருங்கு வாழ்தற்கு அரிது;ஆதலின், குறுகல் ஓம்புமின் - அதனை அணுகுதலைப்பரிகரிமின்.
(முடிபு) அறிவுடையீரே, இனியோள் குணனும் படர்செய்யுமாயின்காமம் உடனுறைவரிது; குறுகல் ஓம்புமின்.
(கருத்து) காமம் என்னால் தாங்கற்கரியது.
(வி-ரை.) கேட்டார் பிற செயல்களை மறந்து நிற்றலின் அமிழ்தத்தை உவமை கூறினர்; “அஞ்சொற்க ளமுதி னள்ளிக் கொண்டவள்” (கம்ப. மாரீசன், 70) என்றார் கம்பரும். அந்தீங் கிளவி - அழகிய இனிய சொல்; அழகு பொருளால் அமைந்தது; இனிமை, மென்மையாலமைந்தது. தான் நுகர்ந்த இனிமையைச் சொல்லால் உணர்த்தலாகாமையின் ‘அன்ன இனியோள்’ என்றான் (திருச்சிற். 19, பேர்.) இனிமை ஐம் பொறிக்கும் இனிமை. குணனும்: உம்மை உயர்வு சிறப்பு. இத்தகைய இனிமையை யுடையாளது இனிய குணங்களும் காமத்தின் தொடர்பால் இன்னாமை செய்யின் அக்காமம் கோடற்கு உரியதன்றென்றான்.
‘கிளவி அமிழ்தத்தன்ன; குணனும் அன்ன; இன்ன (கிளவியும்குணனும்) படர் செய்யுமாயின் காமம் உடனுறை வரிது’ எனக் கூட்டிப்பொருள் கொள்ளுதலும் பொருந்தும்.