கண் வீழ்ந்து, படர் கூர்ந்திசின் - துன்பம் மிக்கேன்; மாமழை - கரிய மேகம், அன்னள் - அத்தகைய துன்பத்தைஉடையாள், அளியள் - இரங்கத் தக்காள், என்னாது -என்று எண்ணாமல், இன்னும் பெய்ய முழங்கி - இன்னும்மழையைப் பெய்யும் பொருட்டு முழக்கம் செய்து, என்இன்னுயிர் குறித்து - எனது இனிய உயிரைக் கொள்ளுதலைக்குறித்து, மின்னும் - மின்னா நின்றது.
(முடிபு) தோழி, அவர் காடிறந்தோர்; யான்படர் கூர்ந்திசின்; மழைஎன் உயிர் குறித்து மின்னும்.
(கருத்து) கார்காலம் வந்தது கண்டு யான் துன்புறு வேனாயினேன்.
(வி-ரை.) அவர்: நெஞ்சறி சுட்டு. கேடில் விழுப் பொருள் - தன்னை உடையார் கெடுதலன்றித் தான் கெடுதலறியாத சீரிய பொருள்; “வீத லறியா விழுப்பொருள்” (கலி. 86:21) என்ற இடத்து நச்சினார்க்கினியர் இங்ஙனம் பொருள் எழுதினர். “கேடில் விழுச்செல்வங் கல்வி” (குறள், 400) என்று கூறுவதே தக்கதாதலின் கேடுடைய செல்வத்தை இங்ஙனம் கூறியது குறிப்பு மொழி எனலும் பொருந்தும்; இ. கொ.8, உரை பார்க்க.
வள்ளியங்காடு: அம், சாரியை, படர் - நினைந்து வருந்தும் துன்பம், அன்னள் - மிக்க வருத்தத்தை உடையவள், உயிர் குறித்து - உயிரைக் கொள்ளுதல் குறித்து (குறுந். 188:4, 197:5.)
மேற்கோளாட்சி 2.சொல்லின் ஈற்றிலும் அசை நிலை ஏகாரம் வந்தது(தொல். இடை, 9, ந.); ஈற்றசை செய்யுளிடையும் வந்தது (இ. வி. 278.)
1-2. அளவடிக்கண் ஆசிரியப்பாவில் சீர் கூனாய் வந்தது (தொல்.செய். 47, இளம்,49, பேர், ந.); நான்கு இயற்சீரும் வந்தன (தொல். செய். 13,பேர், ந.); வருக்க வெதுகை வந்தது (தொல். செய். 94, பேர்);செய்யுளிடைக்கண் வரும் ஈற்றசை ஏகாரம் இரண்டு மாத்திரை பெற்றுப்பாவென்னும் உறுப்பை விளக்கி நின்றது(தொல். இடை, 38, ந.);வினையிடத்து ரகர ஈற்றயல் ஆகாரம் ஓகாரமாயிற்று (இ. வி. 326.)
மு. ஆசிரியத்துள் அடிமுதற்கண் கூன் வந்தது (வீர.யாப்புப். 13;யா.வி. 94; யா.கா.ஒழிபு. 8; இ.வி. 751.)
ஒப்புமைப் பகுதி 2. வள்ளியங்காடு: முல்லைப். 101. வாடா வள்ளி - கூத்து;தொல். புறத். 5; பெரும்பாண். 370.
1-2. பொருள் தரும் பொருட்டுத் தலைவர் சென்றார்: குறுந். 254:6,331:8, 350:8, 395:2. 3. வளை நெகிழ்தல்:குறுந். 11:1, ஒப்பு.
4. பாடமை சேக்கை: “படையமை சேக்கை” (அகநா. 289:12.)
(216)
(‘பகற் குறியும் இரவுக் குறியும் இப்பொழுது பொருந்தா; என்செய்வேம்!’ என்றதற்குத் தலைவன் உடன்போக்கை எண்ணிவெய்துயிர்த்தான்; அது நன்றேயென நான் கூறினேன்” எனத் தோழிதலைமகளுக்குக் கூறி உடன்போக்கை நயக்கச் செய்தது.)