சேரமானெந்தை. (பி-ம்.) 3. ‘வலஞ்சுழி’ 5. ‘தேனூரொண்ணுத’
(ப-ரை.) சிலம்பு அணிகொண்ட - மலைப் பக்கமானது தனக்கு அழகாகக் கொண்ட, வலம் சுரி மராஅத்து - வலமாகச் சுரித்த வெண் கடப்ப மலரை உடைய, வேனில் அம்சினை - வேனிற் காலத்தில் மலர்ந்த அழகிய கிளையினிடத்தில், கமழும் - மணக்கின்ற, தேம் ஊர் ஒள்நுதல் - நன்மணம் பரவிய விளக்கத்தை உடைய நெற்றியை உடையாய், நீர் வார் கண்ணை - துயரத்தினால் நீர் சொரியும் கண்ணை உடையாயாகி, நீ இவண் ஒழிய - நீ இங்கே தனியாகத் தங்க, பிரிகிற்பவர் - நின்னைப் பிரிந்து செல்லும் ஆற்றல் உடையவர், யார் - யாவர்? செலவு - தலைவர் செல்லுதல், நின்னொடும் - நின்னோடே ஆகும்.
(முடிபு) ஒண்ணுதல், நீ ஒழியப் பிரிகிற்பவர் யார்? செலவு நின்னொடும் ஆகும்.
(கருத்து) தலைவர் நின்னைப் பிரிந்து செல்லார்.
(வி-ரை.) தலைவன் பிரிந்தால் தலைவி துயர மிகுதியினால் அழுது கொண்டேயிருத்தல் இயல்பாதலின், ‘நீர்வார் கண்ணை நீயிவ ணொழிய’ என்றாள்; “அழப்பிரிந் தோரே” (குறுந். 307:9.) யாரோ என்பது ஒருவருமிலர் என்னும் பொருளில் வந்தது. பிரிகிற்பவர் - பிரியச் சம்மதிப் போரெனலுமாம்; கிற்றல் - சம்மதித்தல் (தக்க.57, உரை). வலஞ்சுரி என்றது பூவிற்கு அடை;மராம்: ஆகுபெயர்; “நெடுங்கான் மரா அத்துக் குறுஞ்சினை பற்றி, வலஞ்சுரி வாலிணர் கொய்தற்கு நின்ற” (ஐங்.383: 2-3). வேனில் - இங்கே இளவேனில்; மராம் இளவேனிலில் மலரும் என்பது, ஐங்குறு நூற்றில் இளவேனிற் பத்தில் உள்ள, “அவரோ வாரார் தான்வந் தன்றே,