பக்கம் எண் :


57


(பிரிந்த தலைவன் மீண்டுவருவேன் என்று சொல்லிய இளவேனிற் பருவத்தைக் கண்ட தலைவி, “தலைவர் பிரிவினால் எனக்கு உண்டாகிய வேறுபாடுகளைக் கண்டு ஊரார் பழி கூறுகின்றனர். அது தீர அவர் இன்னும் வந்திலர்” என வருந்திக் கூறியது).
 24.    
கருங்கால் வேம்பி னொண்பூ யாணர் 
    
என்னை யின்றியுங் கழிவது கொல்லோ  
    
ஆற்றய லெழுந்த வெண்கோட் டதவத்  
    
தெழுகுளிறு மிதித்த வொருபழம் போலக்  
5
குழையக் கொடியோர் நாவே 
    
காதல ரகலக் கல்லென் றவ்வே. 

என்பது பருவம் கண்டு ஆற்றாளாகிய கிழத்தி உரைத்தது.

     (பருவம் - தலைவன் வருவேனென்று கூறிச் சென்ற காலம்; ஈண்டு இளவேனில்).

பரணர்.

    (பி-ம்) 4. ‘தெழுகளிறு’ 5. ‘குழையகக் கோட்டியோர்’, ‘கோடியோர்’ 6. ‘காதலர்க்கல்லென் றவ்வே’, ‘காதலர்க்கவ் வென்றவ்வே’, ‘நாம் வெங்காதலர்க்கவ்வென் றவ்வேய.

    (ப-ரை.) கரு கால் வேம்பின் ஒள் பூ யாணர் -கரிய தாளை உடைய வேப்ப மரத்தின் ஒள்ளிய பூவின் புதுவருவாயானது, என்னை இன்றியும் - என்னுடைய தலைவன் இல்லாமலும், கழிவது கொல் - செல்வதுவோ? கொடியோர் நா- அயலாராகிய கொடிய மகளிருடைய நாக்கள், காதலர் அகல - என் காதலர் என்னை நீங்கிச் செல்ல, ஆற்று அயல் எழுந்த - ஆற்றங்கரையில் முளைத்து வளர்ந்த, வெள் கோடு அதவத்து - வெள்ளிய கொம்புகளை உடைய அத்தி மரத்தினது, எழு குளிறு மிதித்த - உண்ண விரும்பிய ஏழு நண்டுகளால் மிதிக்கப்பட்ட, ஒரு பழம் போல - ஒற்றைப் பழமானது குழைவது போல, குழைய - நான் வருந்தும்படி, கல்லென்ற - அலர்கூறிக் கல்லென்று முழங்கின.

    (முடிபு) ஒண்பூ யாணர் கழிவது கொல்லோ? காதலர் அகலுதலால் குழையக் கொடியோர்களின் யா கல்லென்றன.

    (கருத்து) தலைவர் வாராமையின் ஊரினர் பழி கூறுதல் அடங்கவில்லை.