பக்கம் எண் :


460


அரிது - வரைவுக்குரிய நாள் வாராமை அரிதாகும்; வரைவு நேரும்; அவன் மார்பு உறுக என்ற நாள் குறுகி - அவனது மார்பை அடைக என்று வரையறுத்த நாள் அணிமையாக வந்தும், ஈங்கு ஆகின்று - இவ்வண்ணம் நின்பால் ஆற்றாமை உண்டாகின்றது; இஃது என் கொல்?

    (முடிபு) தோழி, துறைவனை யாய் கூறி அறிந்தனள்; அது வரலன்மைஅரிது; குறுகி ஈங்காகின்று.

    (கருத்து) வரைவு அணிமையில் நிகழ்வதாதலின் நீ ஆற்றாது இருத்தல் நன்றன்று.

    (வி-ரை.) அது: நெஞ்சறி சுட்டு; வரைவு நாளைச் சுட்டியது. அன்மையோ: ஓகாரம் அசை நிலை. அரிதே: ஏகாரம் தேற்றம். குறுகியுமென்ற உம்மை தொக்கது. குறுகியதனால் இத்தகைய முயற்சிகள் நடை பெறுகின்றன என்று பொருள் கொள்ளுதலும் ஆம்.

    கோடை-மேல்காற்று; குறுந். 343:5, 388:2, 369:3. மணல் மேலே பரவப் பரவ வெளியிலே தோன்றும் பனையின் அடிப் பகுதி குறியதாகின்றது. பெரிய கூறுதலாவது. இது தெய்வத்தான் வந்ததெனக் கூறுதல்; பெரிய கூறல், புறநா. 375:19. கூறியென்றது கூறி வெறியாட்டெடுத்தாள் என்பதைக் குறித்தது. யாய் அறிந்தது, தோழி அறத்தொடு நின்றதனால்.

    ஒப்புமைப் பகுதி 1-2. தலைவன் மார்பைத் தலைவி உறுதல்: குறுந். 68:4, ஒப்பு; 247:7, ஒப்பு.

    3.ஆகின்று: குறுந். 15:4, ஒப்பு. ஈங்காகின்று: நற். 144:5.

    5.மணற்கோட்டின்மேல் அடும்பங் கொடி படர்தல்: (குறுந்.349:12); "அடும்பிவ ரணியெக்கர்" (கலி. 132:16); "அடும்பம னெடுங்கொடி யுள்புதைந் தொளிப்ப, வெண்மணல் விரிக்குந் தண்ணந் துறைவன்" ( தொல். களவு. 20, ந. மேற்.)

    4-5. காற்றால் மணற்குவியல் உண்டாதல்; (குறுந். 372); "கடுவளி தொகுப்ப வீண்டிய, வடுவா ழெக்கர் மணலினும்" (புறநா. 55:20-21.)

    5-6. மணலாற் பனை மறைதல்: குறுந். 372:1-3.

(248)
  
(தலைவன் வரைவிடை வைத்துப் பிரியும் காலத்தில், தன்னை நோக்கி, "நீ ஆற்றும் ஆற்றல் உடையையோ?" என்ற தோழிக்கு, "அவர் மலையைக் கண்டு ஆற்றுவேன்" என்பது படத் தலைவி கூறியது.)
 249.   
இனமயி லகவு மரம்பயில் கானத்து 
    
நரைமுக வூகம் பார்ப்பொடு பனிப்பப்  
    
படுமழை பொழிந்த சார லவர்நாட்டுக் 
    
குன்ற நோக்கினென் றோழி 
5
பண்டை யற்றோ கண்டிசி னுதலே. 

என்பது வரைவிடை வைப்ப, ஆற்றகிற்றியோ வென்ற தோழிக்குக்கிழத்தி உரைத்தது.