பக்கம் எண் :


462


(தலைவியைப் பிரிந்து சென்று வினைமுற்றி மீண்டு வரும் பொழுது தலைவன் தேர்ப்பாகனை நோக்கி, "இன்று மாலை வருவதற்குள் தலைவி இருக்கும் இடத்திற்கு விரைவில் தேரைச் செலுத்துவாயாக" என்றது.)
 250.   
பரலவற் படுநீர் மாந்தித் துணையோ 
    
டிரலை நன்மா னெறிமுத லுகளும் 
    
மாலை வாரா வளவைக் காலியற் 
    
கடுமாக் கடவுமதி பாக நெடுநீர்ப்  
5
பொருகயன் முரணிய வுண்கட்  
    
டெரிதீங் கிளவி தெருமர லுயவே. 

என்பது தலைமகன் பாகற்கு (பி-ம். பாங்கற்கு) உரைத்தது.

நாமலார் மகன் இளங்கண்ணன் (பி-ம். இளங்கணன்.)

    (பி-ம்.) 2. ‘டிரலைமான்’, ‘னெறிதலுமுகளும்’; 4. ‘கடுமா கடவுமதி’; 6. ‘தெருமரலுகவே’.

    (ப-ரை.) பாக - தேர்ப்பாகனே, பரல் அவல் படு நீர் - பருக்கைக் கற்களை உடைய பள்ளத்திலே தங்கிய நீரை, மாந்தி - உண்டு, இரலை நல்மான் - ஆண்மான், துணையோடு - பெண் மானோடு, நெறி முதல் - வழியினிடத்து, உகளும் - துள்ளி விளையாடுகின்ற, மாலைவாரா அளவை - மாலைக் காலம் வருவதற்கு முன்னே, நெடு நீர் பொரு கயல் முரணிய உண்கண் - ஆழ்ந்த நீரில் உள்ள ஒன்றை ஒன்று எதிர்ந்த இரண்டு கயல்களை ஒத்த மையுண்ட கண்களையும், தெரி தீம் கிளவி - ஆராய்ந்த இனிய சொற்களையும் உடைய தலைவி, தெருமரல் உய - துன்பத்தால் சுழலுதலினின்றும்நீங்க, கால் இயல் கடுமா கடவுமதி - காற்றின் இயல்பை உடைய விரைகின்ற குதிரையைச் செலுத்துவாயாக.

    (முடிபு) பாக, மாலை வாரா அளவை, கிளவி உய மாக்கடவுமதி.

    (கருத்து) மாலை வருவதற்கு முன் தலைவி இருக்கும் இடத்திற்குத்தேரைச் செலுத்துவாயாக.

    (வி-ரை.) மாலை வந்தால் தலைவி காமம் மிக்குத் துன்புறுவதன்றித்தானும் நெறி முதலுகளும் இணை மான்களைக் கண்டு, ‘இப்பொழுது நாம் இங்ஙனம் தலைவியோடு இருக்கப் பெற்றிலேமே!' என்னும் ஆராமை உறுதலின் அதற்கு முன் தலைவிபாற் செல்ல விரும்பினான்.

    கடவாக் குறையன்றிக் குதிரையாற் குறையில்லையென்பான் அதனை, ‘காலியற் கடுமா' எனச் சிறப்பித்தான்.

    நெடுநீர்: நெடுமை இங்கே ஆழத்தின் மேற்று; "நெடுங் கடலுந்தன்னீர்மை குன்றும்" (குறள், 17) என்புழிப் போல.