கிடங்கிற் குலபதி நக்கண்ணன் (பி-ம். கிடங்கிற் குலபதினைக் கண்ணன்.) (பி-ம்.) 1. ‘நெகிழக்’; 4. ‘னவனே பேணி’; 7. ‘முன்னர் நானும்’.
(ப-ரை.) தோழி--, நெடிய திரண்ட தோள்வளை ஞெகிழ்த்த - நெடுமையையும் திரட்சியையும் உடைய தோள்களில் உள்ள வளைகளை நெகிழச் செய்த, கொடியனாகிய குன்றுகெழு நாடன் - கொடுமையை உடையவனாகிய குன்றுகள் பொருந்திய நாட்டை உடைய தலைவன், வருவதோர் காலை - பரத்தையர் வீட்டினின்று வருங்காலத்தில், இன்முகம் திரியாது - இனிய முகம் வேறுபடாமல், கடவுள் கற்பின் - தெய்வத் தன்மையை உடைய கற்பினால், அவன் எதிர் பேணி - அவனை எதிர்முகமாகச் சென்று உபசரித்து,