உறையூர்ச் சிறுகந்தன். (ப-ரை.) தோழி-, நம் காமத்துப் பகை - நம்மிடத்து உள்ள காமமாகிய பகை, வேரும் முதலும் கோடும் - வேரிலும் அடிமரத்திலும் கிளையிலும், ஒராங்கு - ஒரு படியாக, தொடுத்த போல - தொடுத்து வைத்தன போல, தூங்குபு தொடரி - தொங்கித் தொடர்ந்து, கீழ் தாழ்வன்ன - கீழே தாழ்ந்தாற் போன்ற, வீழ்கோள் பலவின் - தணிந்த குலைகளை உடைய பலா மரத்தினை உடைய, ஆர்கலி வெற்பன் - ஆரவாரத்தை உடைய மலைக்குத் தலைவன், வருதொறும் - இங்கே வருந்தோறும், வரூஉம் - வெளிப்படும்; அகலினும் - அவன் அகன்றாலும், அகலாதாகி - போகாததாகி, இகலும் - மாறுபடும்; இஃது என்ன வியப்பு!
(முடிபு) தோழி, காமத்துப் பகை, வெற்பன் வருதொறும் வரூஉம்;அகலினும் இகலும்.
(கருத்து) தலைவனைப் பிரிதலின்றி ஒன்றியிருத்தலே எனக்கு இன்பம் பயப்பது.