பரணர். (பி-ம்.) 1. ‘வாரலோ வாரலெஞ்சேரி’; 2. ‘பெருமா காவிரி’; 4. ‘சேந்தனுறந்தை’; 5. ‘அரியரி லம்புகவிளங்கோட்டு வேட்டை’; 7. ‘தொழுதன கண்ணே’.
(ப-ரை.) பெரும-, காவிரி பலர் ஆடு பெருதுறை - காவிரி நதியினது பலர் நீராடுகின்ற பெரிய நீர்த்துறையின்கண் வளர்ந்த. மருதொடு பிணித்த - மருத மரத்தில் கட்டிய, ஏந்து கோடு யானை - மேல் உயர்ந்த கொம்பை உடைய யானைகளை உடைய, சேந்தன் தந்தை - சேந்தனுடைய தந்தையும், அரியலம்புகவின் - கள்ளாகிய உணவையும், அம் தோடு வேட்டை - அழகிய விலங்குத் தொகுதியை வேட்டையாடும் தொழிலையும், நிரையம் ஒள்வாள் - பகைவருக்கு நரக வாழ்வைப் போன்ற துன்பத்தைத் தரும் ஒள்ளிய வாளையும் உடைய, இளையர் பெருமகன் - இளைய வீரர்களுடைய தலைவனுமாகிய, அழிசி ஆர்க்காடு அன்ன - அழிசியினது ஆர்க்காடென்னும் நகரத்தைப் போன்ற, இவள் பழி நீர் மாண் நலம் - இவளது குற்றந் தீர்ந்த மாட்சி மைப்பட்ட அழகு, தொலைதல் கண்டு - அழிதலைக் கண்ட பின், எம் சேரி - எமது சேரிக்கண், வாரல் - வருதலை யொழிவாயாக; நின் தார் தாரல் - நின் மாலையைத் தருதலை யொழிக; அலர் ஆகின்று - பழிமொழி உண்டாகின்றது.
(முடிபு) பெரும, இவள் நலம் தொலைதல் கண்டு வாரல்; தாரல்.