கழார்க் கீரன் எயிற்றி (பி-ம். கிழார்க் கீரனெயிற்றி.) (பி-ம்.) 1. ‘படுமழை’; 2. ‘விற்பெயற்’, ‘விற்பெயர்க்’; 5. ‘பொழுதினாணு’;8. ‘விழுமந்தானே’.
(ப-ரை.) தோழி-, காவலர் கணக்கு ஆய் வகையின் வருந்தி - நாழிகைக் கணக்கர் இரவில் காலக் கணக்கை ஆராயும் திறத்தைப் போல ஆராய்ந்து வருந்தி, நெஞ்சு புண் உற்ற விழுமத்தான் - நெஞ்சம் புண்பட்ட துன்பம் காரணமாக, பழமழை பொழிந்தென - பழைய மழை பொழிந்ததாக, பதன் அழிந்து உருகிய - செவ்வி அழிந்து ஒழுகிய, சிதடு காய் எண்ணின் - உள்ளீடு இல்லாத ஊமைக் காயை உடைய எட் பயிரை உடைய, சில் பெயல் கடைநாள் - சிறிய மழையை உடைய கார்ப் பருவத்தின் இறுதி நாட்களில், சேற்று நிலை முனைஇய - சேற்றின்கண் நிற்றலை வெறுத்த, செ கண் காரான் - சிவந்த கண்ணை உடைய எருமை, நள்ளென் யாமத்து - இருள் செறிந்த நடு இரவின் கண், ஐ என கரையும் - ஐயென்று ஒலிக்கும், அஞ்சு வரு பொழுதினானும் - அச்சம் உண்டாகின்ற காலத்திலும், என் கண் - என்னுடைய கண்கள், துஞ்சா - தூங்காவாயின.
(முடிபு) தோழி, வருந்தி உற்ற விழுமத்தான் பொழுதினானும் என்கண் துஞ்சா.
(கருத்து) தலைவனது வருகையை நோக்கி நான் இரவில் துயிலாதுஇருந்தேன்.