ஒளவையார். (பி-ம்.) 1. ‘மூட்டுவேன்கொல்’ 2. ‘ஓரே யானும்’
(ப-ரை.) அலமரல - சுழலுதலை உடைய, அசை வளி - அசைந்து வருகின்ற தென்றல் காற்று, அலைப்ப - வருத்தா நிற்க, என் உயவு நோய் அறியாது - எனது வருந்துதலை உடைய காம நோயை உணர்ந்து கொள்ளாமல், துஞ்சும் ஊர்க்கு - கவலையின்றித் தூங்கும் ஊரில் உள்ளாரை, யான், முட்டுவேன் கொல் - முட்டுவேனோ? தாக்குவேன் கொல் - தாக்குவேனோ? ஓர் பெற்றி மேலிட்டு - ஒரு தலைக்கீட்டை மேற்கொண்டு, ஆஅ ஒல்லென - ஆவென்றும் ஒல்லென்றும் ஒலி உண்டாக, கூவுவேன் கொல் - கூப்பிடுவேனோ? ஓரேன் - இன்னது செய்வது என்பதை அறியேன்.
(முடிபு) ஊரை முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்? கூவுவேன் கொல்? ஓரேன்.
(கருத்து) என்னுடைய நோயைத் தாயர் முதலியோர் அறியாமையின் யான் ஆற்றேன் ஆயினேன்.