பக்கம் எண் :


515


     (வி-ரை.) எருமையின் மணி ஓசையைத் தலைவி துயிலாது கேட்டவளாதலின் இங்ஙனம் கூறினாள். இரவில் தனிமையை மிகுதிப் படுத்திக் காட்டும் அம்மணி ஓசையினால் தலைவி துன்புறுவாள். இதனை இந்நூல் 86-ஆம் செய்யுளாலும் உணரலாகும்.

    புலம்பு கொள் யாமம் என்றது தனது தனிமையை நினைந்து. மழைகழூஉ மறந்த துறுகல் என்றது மழையின்றி வெம்பிய பாலை நிலத்தின்இயல்பைக் குறிப்பித்தபடி துகள் - புழுதி; யானை தன் மீது புழுதியைத் தானே வாரி வீசிக் கொண்டதனால் துகள் சூழ்ந்ததாகும்.

     பணைத் தோள்களை உள்ளுவாராயின் அவற்றோடு பொருந்திஅளவளாவும் ஆர்வத்தால் மீள்வர் என்பது தலைவியின் கருத்து.

     கொல், ஓ, ஏ: அசை நிலைகள்.

     ஒப்புமைப் பகுதி எருமை ஆன்: பெரும்பாண்.165; அகநா. 165:5. திரிமருப் பெருமை: அகநா. 206:3.

     2. பகுவாய்த் தெண்மணி: குறுந். 155:4.

     1-4. குறுந். 86:4-6, ஒப்பு.

     6. துகள் சூழ் யானை: ‘நீறாடிய களிறு’ (பட். 48.)

     5-6. துறுகல்லிற்கு யானை: குறுந். 13:1-2, ஒப்பு.

     8. இறைப்பணைத்தோள்: குறுந். 168:5; கலி.38:26; புறநா. 354:9.

(279)
  
(தன்னை இடித்து உரைத்த பாங்கனை நோக்கித் தலைவன் தலைவியினது அருமையைக் கூறியது.)
 280.   
கேளிர் வாழியோ கேளிர் நாளுமென் 
    
நெஞ்சுபிணிக் கொண்ட வஞ்சி லோதிப் 
    
பெருந்தோட் குறுமகள் சிறுமெல் லாகம் 
    
ஒருநாள் புணரப் புணரின் 
5
அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே. 
    

என்பது கழற்றெதிர்மறை.

நக்கீரர்.

     (பி-ம்.) 5. ‘வேண்டலன்’.

     (ப-ரை.) கேளிர் - நண்பரே, வாழி - நீர் வாழ்வீராக! கேளிர், நாளும் என் நெஞ்சுபிணி கொண்ட - எப்பொழுதும் என்னுடைய நெஞ்சத்தைத் தன்னிடத்திலே பிணித்துக் கொண்ட, அம் சில் ஓதி - அழகிய சிலவாகிய கூந்தலையும், பெரு தோள் - பெரிய தோளையும் உடைய, குறுமகள் -