குடவாயிற் கீரத்தன். (பி-ம்.) 2-3. ‘வெண்டோ டத்த’.
(ப-ரை.) செ இழை - சிவந்த பொன் அணியை உடையாய், நமர் - நம் தலைவர், வெள் மணல் பொதுளிய - வெள்ளிய மணலின் கண்ணே தழைத்த, பசு கால் கருக்கின் - பசிய அடியையும் கருக்கையும், கொம்மை போந்தை - திரட்சி யையும் உடைய பனையினது, குடுமி வெள் தோடு - உச்சியில் உள்ள வெள்ளிய குருத்தோலையின் கண் வைத்த, அத்த வேம்பின் - பாலை நிலத்தில் உள்ள வேப்ப மரத்தினது, அமலை வான் பூ - நெருக்கத்தை உடைய வெள்ளிய மலரை, சுரி ஆர் உளைதலை பொலிய சூடி - சுழித்தல் ஆர்ந்த மயிரை உடைய தலை விளங்கும்படி அணிந்து கொண்டு, குன்றுதலை மணந்த கானம் - மலைகளோடு சேர்ந்த காட்டை, சென்றனர் கொல் - கடந்து சென்றனரோ?
(முடிபு) சேயிழை, நமர் கானம் சென்றனர் கொல்?
(கருத்து) தலைவர் பாலையைக் கடந்து சென்றனரோ? இலரோ?
(வி-ரை.) குடுமி - உச்சி. உச்சியில் உள்ளதென்றும் வெண்ணிறம்உடையது என்றும் சிறப்பித்தமையால் தோடு, குருத்தோலை ஆயிற்று.