பக்கம் எண் :


536


கண்கள் அழுதமையால் நீர்த்துளிகளோடு கூடித் துளிக்கேற்ற மலர்போன்றன. துளிக்கு: உருபு மயக்கம்.

     ஒப்புமைப் பகுதி 1. மரங்களைச் சுட்ட இடத்தில் தினையை விளைத்தல்: குறுந். 198:1-2, ஒப்பு. 2. கொடிச்சி: குறுந். 272:8, ஒப்பு.

     1-2. ஏனலில் தலைவி கிளிகடிதல்: குறுந். 198:1-5.

    குளிராற் கிளி கடிதல்: “ஏனல், உண்கிளி கடியுங் கொடிச்சிகைக்குளிரே” (குறுந். 360:5-6); “குளிரும் பிறவும், கிளிகடி மரபின வூமூழ்வாங்கி” (குறிஞ்சிப். 43-4): “சிறுகிளி கடிதல் பிறக்கியா வணதோ, குளிர்படு கையள் கொடிச்சி” (நற். 306:2-3.)

     4. சீவக. 1498.

     6. குண்டு நீர்ப் பைஞ்சுனைப் பூத்த குவளை: குறுந். 59:2-3, ஒப்பு.

     5-8. நற். 379:5-9.

(291)
  
(தலைவன் இரவுக்குறிக்கண் வந்து சிறைப்புறத்தானாக, அதனைஅறிந்த தோழி தலைவிக்குக் கூறுவாளாய், “நம் தாய், ஒரு நாள் தலைவன் வந்ததை அறிந்தாள்; அறிந்த அன்று முதல் முன்னையினும் மிகப் பாதுகாத்து வருகின்றாள்” என்று கூறி விரைவில் வரைந்து கோடலே நன்று என்பதைப் புலப்படுத்தியது.)
 292.    
மண்ணிய சென்ற வொண்ணுத லரிவை 
    
புனறரு பசுங்காய் தின்றதன் றப்பற் 
    
கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை 
    
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான் 
5
பெண்கொலை புரிந்த நன்னன் போல 
    
வரையா நிரையத்துச் செலீஇயரோ வன்னை 
    
ஒருநாள், நகைமுக விருந்தினன் வந்தெனப் 
    
பகைமுக வூரிற் றுஞ்சலோ விலளே. 

என்பது தோழி இரவுக் குறிக்கட் சிறைப்புறமாகக் காப்பு மிகுதிசொல்லியது.

பரணர்.

     (பி-ம்.) 1. ‘பொன்னுத லரிவை’; 2. ‘றப்பிற’்; 4. ‘கொடுப்பினுங்’;6. ‘செலீஇயளோ’.

     (ப-ரை.) அன்னை - தாய், ஒரு நாள் - ஒரு நாளில்,நகை முகம் விருந்தினன் வந்தென - நகுதலை உடையமுகத்தைக் கொண்ட விருந்தினனாகித் தலைவன் வந்தானாக,பகைமுகம் ஊரின் - பகைவர் மாறுபடும் போர்க் களத்தின்கண்