(வி-ரை.) இது: செய்யுளாதலின் சுட்டு முன் வந்தது. மற்று, ஓ:அசைநிலைகள். நீர்க்குப் பின்னே நிலம் தோற்றுதலின் நீரை முதுநீரென்றாள். கொண்கன் - நெய்தனிலத் தலைவன் (குறுந். 212, வி- ரை.)
‘தலைவனைக் கண்ட கண்ணும் கேட்ட செவியும் வாளாவிருப்பத்தோள்கள் மட்டும் தம் மெலிவைப் புறத்தாரறியும்படி நெகிழ்ந்தன’ என்றாள். இடையிட்டு வந்து அளவளாவும் களவொழுக்கத்தில் தான் தலைவனைப் பிரிந்திருக்குங் காலத்தில் ஆற்றாமை மிகுமென்பதும், இடையீடின்றி அளவளாவும் கற்பொழுக்கத்திற்குரிய வரைவே இனி மேற்கொள்ளுதற்கு உரியதென்பதும் இதனால் தலைவனுக்குக் குறிப்பிக்கப்பட்டன.
ஒப்புமைப் பகுதி 1. இதுமற்றெவனோ தோழி: குறுந். 181:1.
3. புன்னை இணர்: குறுந். 303:6.
4. ஞான்றை : குறுந். 393:5.
3-4. புன்னை நீழற் புணர்குறி: (குறுந். 123:3-4, ஒப்பு.); “புன்னையங் கானற் புணர்குறி வாய்த்த” (நற். 227:3); “மின்னிலைப்பொலிந்த விளங்கிண ரவிழ்பொற், றண்ணறும் பைந்தா துறைக்கும்,புன்னையங் கானற் பகல்வந் தீமே”, “பூவேய் புன்னையந் தண்பொழில்,வாவே தெய்ய மணந்தனை செலற்கே”, “கழிசேர் புன்னை யழிபூங்கானற், றணவா நெஞ்சமொடு தமியன் வந்துநம், மணவா முன்னும்” (அகநா. 80:11-3, 240:14-5, 290: 9-11); “புன்னையங் கானலிருந்தேமாப் பொய்த்தெம்மைச,் சொன்னலங் கூறி நலனுண்டசேர்ப்பனை” (கைந்நிலை, 54); “கண்டலை யேகரி யாக்கன்னிப் புன்னைக்கலந்தகள்வர்” (திருச்சிற். 177.)
7. மாணலம்: குறுந். 74:5, ஒப்பு.
தோள் தலைவனை மணப்பின் நலமெய்தல்: ஐங். 120.8. தலைவனைப் பிரிந்தமையால் தோள் நெகிழ்தல்: குறுந். 87:5, ஒப்பு.; குறிஞ்சிப்.9;நற். 14:1, 309:1; ஐங். 230:3; கலி. 37:11, 45:15.
தடமென்றோள்: குறுந். 77:6, ஒப்பு. 87:5.
7-8. தோள் மணத்தல்: குறுந். 36:4, ஒப்பு, 50:5, ஒப்பு.
தோள் மணப்பின் நலம் பெற்றுத் தணப்பின் ஞெகிழ்தல்: “தணந்தமை சால வறிவிப்ப போலும், மணந்தநாள் வீங்கிய தோள்” (குறள், 1233.)
5-8. “கண்டன வுண்கண் கலந்தன நன்னெஞ்சம், தண்டப்படுவதடமென்றோள் - கண்டாய், உலாஅ மறுகி லுறையூர் வளவற்,கெலாஅமுறைகிடந்த வாறு” (முத். 55.)
(299)
(இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவன் தலைவியை நோக்கி, “நான்நின்னைப் பிரியேன்; பிரியின் ஆற்றேன்” என்றானாக அது கேட்டதலைவி, “பிரிவென்பது ஒன்றும் உண்டாங்கொல்?’ என அஞ்சினாளை,“நீ அஞ்சற்க; நான் இவ்வுலகத்தைப் பெறுவேனாயினும் நின்னைப்பிரியேன்” என அவன் வற்புறுத்தியது.)